முதல்வர் விருது பெற்ற காதர் மொகிதீனுக்கு கொழும்பில் பாராட்டு விழா..!
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மெகிதீனுக்கு கொழும்பில் செப்டம்பர் 19ஆம் திகதி அன்று பாராட்டு விழா நடக்கிறது. இதில் இந்தியாவில் முக்கிய தமிழக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் சமுதாய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 15-08-2025 வெள்ளிக்கிழமை மாலை சென்னை எழும்பூர் பைஸ் மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டு விழா மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய உயர்நிலை அரசியல் ஆலோசனை குழு தலைவர் செய்யது சாதிக் அலி தங்ஙள், தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி அவர்கள், தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப், நீதியரசர் அக்பர் அலி அவர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய, மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், திராவிடர் கழக பொதுச் செயலாளர் பூங்குன்றன் அவர்கள், மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி ரங்கராஜன் அவர்கள், தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய துணை தலைவர் இறையன்பன் குத்தூஸ் அவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பேசியதாவது : நமது பேராசிரியர் கே. எமா. காதர்மொகிதீனா பெருந்தகை அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தகைசால் தமிழர் விருது வழங்குவதையிட்டு, இந்த இந்திய பெருநிலப் பரப்பில் வாழ்கிற ஏறத்தாழ 30 கோடி முஸ்லிம்கள் அனைவரும் பேருவகை அடைவதைப் போல, 20 லட்சமாக வாழ்கிற இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் அவரை வாழ்த்தக் கிடைத்திருக்கிற இந்த நல் வாய்ப்பு எனக்குக் கிடைத்த நற்பேறு என்றே நான் கருதுகிறேன்.
மக்கள் பிரதிநிதித்துவத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக இந்தப் பேராசிரியரை நாங்கள் பார்க்கிறோம். மக்கள் பிரதிநிதித்துவப் பணிகளில் எமக்கு ஏற்படுகின்ற ஐயங்களைப் போக்க, சங்கடங்களில் இருந்து விடுபடுவதற்கான சரியான தீர்வைத் கண்டிட, நல்ல செயல்திட்டங்களை சமயோசிதமாக செய்து முடிக்க என இவை அனைத்துக்கும் தேவையான ஆலோசனைகளுக்கு யாரையோ , எவரையோ, எங்கெங்கோ தேடிப் போய் அவதிப்பட அவசியமில்லை. எமது பேராசிரியர் பெருந்தகை அவர்களே உதாரண புருஷராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். பேராசிரியர் என்கிற இந்த சாளரத்தின் ஊடாகத்தான் நாங்கள் தலைமைத்துவப் பண்புகளை நிறைவாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் முஸ்லிம் சமுதாய மக்கள் சந்திக்கும் நெருக்கடிகள் கொஞ்சநஞ்சம் அல்ல. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல, இதே நெருக்கடிகளை எங்கள் நாட்டில் நாங்களும் அனுபவிக்கின்றோம். குதுபோன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில்தான் பேராசிரியர் அவர்களின் அனுபவமுதிர்ச்சியுடன் கூடிய வழிகாட்டல் எங்களுக்கு மிகப் பெரிய உறுதுணையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை ஜாேர்ஜ் கோட்டையில் வெள்ளிக்கிழமை இந்திய விடுதலை நாளை முன்னிட்டு ஏற்றி வைக்கப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி – அதன் அசோகச் சக்கரம் கொடியின் நடுவில் இருக்கும் நிலையில் அசைந்தாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது, அன்று ஆகஸ்ட் மாதம் 1947ஆம் ஆண்டில் கராச்சியில் எமது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்ன பாடுபட்டு இருப்பார் என்பதைத்தான் நான் எண்ணிப் பார்த்தேன்.
எனக்கு முன் இங்கு உரையாற்றிச் சென்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைகோ, அன்பு நண்பர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரது உரைகளை நான் உன்னிப்பாகத் கேட்டேன். வெறுப்பை விதைப்பவர்கள் குறித்து ஆளூர் ஷாநவாஸ் பேசினார். வெறுப்பை விதைப்பவர்களின் செயல்களில் மிக மிக மோசமானது. நம்மவர்களை நாட்டுப்பற்றாளர்கள் அல்ல என்று சொல்லி, எமது நாட்டுப்பற்றைக் கேள்விக்குள்ளாக்குவது அவர்களது மோசமான செயல்களில் மிக முக்கியமானது. இலங்கையிலும் இதைத்தான் ஒரு கூட்டம் செய்து கொண்டிருந்தது. ஆனால், முன்பு எவரெவரெல்லாம் அவர்களை ஆதரித்து வாக்களித்தனரோ அவர்களே கடந்த தேர்தலில் அந்தத் தீய சக்திகளை நாட்டை விட்டும் விரட்டி விட்டார்கள்.
எனவே அநியாயங்கள் என்றைக்கும் நீடித்துக் கொண்டே இருக்கப் போவதில்லை. வல்லோன் ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
இதற்கெல்லாம் முடிவு வர ஒரு காலம் வரும். அதுவரை நாம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். நமது உயிரினும் மேலான நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால், எமது மார்க்கம் இன்று இப்படி உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்காது. இஸ்லாம் இந்த உலகையே வியாபிக்கிற மார்க்கமாக ஒருநாள் வளர்ந்தே தீரும். அதில் நாம் அழுத்தமான நம்பிக்கை வைக்க வேண்டும்.
“Patriotism is the last refuge of the scoundrel – தேசப்பற்று என்பது அயோக்கியனின் கடைசி அடைக்கலம்” என்று ஓர் ஆங்கில எழுத்தாளன் சொன்னான். எனவே என்னைப் பொருத்தமட்டில், அயோக்கியத்தனத்தின் மொத்த அடையாளமாகத்தான் இன்று ஒரு கூட்டம் தங்களை மட்டும் முன்னிலைப்படுத்தி – நாங்கள் மட்டும்தான் தேசப்பற்றாளர்கள் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கொக்கரிக்கும் கூட்டம் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனவே, இது ஒரேயொரு நாட்டுக்குரிய பிரச்சினை மட்டுமல்ல. ஆக, சிறுபான்மையினர் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களின் தேசப்பற்றையே கேள்விக்குள்ளாக்குகிற இந்தச் சூழலிலும் நமக்குள்ள ஒரே ஆறுதல் – இஸ்லாம் இந்த மண்ணுக்கு வந்த மதமா எந்த மதமா என்று தலைப்பில் ஒரு மிகப்பெரிய ஆய்வைச் செய்து, அதைக் கட்டுரையாக்கி, எவ்வித ஆரவாரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ஒரு மிகப்பெரிய படைப்பை நமக்கு அளித்திருக்கிறார் இந்தப் பேராசிரியர் பெருந்தகை.
மேடையதிர குரலுயர்த்தி, ஆரவாரமாக ஆர்ப்பரித்துப் பேசுகிற மேதாவிலாசம் இருந்தால்தான் மக்கள் தலைவர்கள் என்று சிலர் கருதிக் கொள்வார்கள். ஆனால் இந்தப் பேராசிரியர் பெருந்தகை அவர்களோ மிக அமைதியாக மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா என்று நாம் விக்கித்துப் போகிற பல பிரச்சினைகளையும் கூட அவர் அமைதியாகவும், அனுபவமுதிர்ச்சியோடும் அணுகுகிற விதம் அபூர்வமானது, அலாதியானது.
அவரோடு ஒன்றாகப் பயணிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் பெறுகின்ற படிப்பினைகள் சாமானியமானதல்ல. எனவேதான் அன்னாருக்கு இந்தப் பெருவிருது கிடைத்திருக்கிறது என்ற தகவல் கிடைத்த மாத்திரத்திலேயே ஓடோடிவந்து வாழ்த்த வேண்டும் என்று நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். அடுத்த மாதம் 19ஆம் தேதி இலங்கையில் நாங்கள் இந்தப் பெருமகனாருக்கு ஒரு பெருவிழாவை எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், மணிச்சுடர் நாளிதழின் பிரதம ஆசிரியருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு எனது சார்பிலும், ஸ்ரீலங்கா மீடியா போரம், அதன் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன், சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் சேர்மன் சிராஜூதீன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் இணைந்து கொழும்பில் செப்டம்பர் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறோம். பேராசிரியர் பற்றிய ஆவணம் படமும் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். முதலில் வெளிநாடுகளில் நடக்கும் பாராட்டு விழா நிகழ்ச்சி என்பதை தெரிவித்து அந்த பெருமை இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு பெருமை சேரும்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் முக்கிய துறைகளின் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முனைவர் கோவி. செழியன் ஆகியோரை அழைக்க முடிவு செய்துளாளோம்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முக்கிய தலைவர்கள், பிளாக் துலிப் எஹியா, நோபில் குரூப் தலைவர் ஷாகுல் ஹமீது மற்றும் முக்கிய தொழில் அதபர்கள் இலங்கையில் உள்ள துணை சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியர் அவர்களுக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அந்தப் பெருவிழாவில் இங்கிருந்தும் அமைச்சர் பெருமக்கள் வந்து கலந்து கொள்வதாக இசைவு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் முறைப்படி அழைப்பு விடுத்திருக்கிறோம். அதற்காகவும்தான் நான் இங்கு வந்தேன். அமீரகத்தில் இருந்தும் நிறைய பேர் அவ்விழாவில் பங்கேற்க வருவதற்கு உடன்பட்டு இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். எனவே வர விரும்பும் அனைவரையும் நாங்கள் உவகையோடு வரவேற்கிறோம்.
எங்களின் இந்தப் புலகாங்கிதத்தை எம்மவர்களோடு மட்டுமல்ல; எல்லோரோடும் மிகுந்த ஆவலுடன் பகிர்ந்து கொண்டவனாக, எல்லாம் வல்ல இறைவன் இந்தப் பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை வழங்கி, அவரது நல்ல மக்கட்சேவைகள் என்றென்றும் தொடர அருள் செய்ய வேண்டும் என்று உளமாரப் பிரார்த்தித்து, இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று தலைவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இறுதியாக தகைசால் தமிழர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)








