உலகம்

நாகை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்திய மாணவர்களுக்கு கட்டண சலுகை: 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை என்ற பெயருடன் கப்பல் போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை கப்பல் சேவை தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் திகதியோடு ஓராண்டு நிறைவுபெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை செல்வதற்காக நேற்று நாகப்பட்டினம் துறைமுகம் வந்த பயணிகளுக்கு கப்பல் நிர்வாகம் சார்பில் உரிமையாளர் சுந்தர்ராஜன் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி வரவேற்றார். இதை தொடர்ந்து கப்பலுக்குள் மும்மத பிரார்த்தனை நடந்தது. பின்னர் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் கப்பல் உரிமையாளர் சுந்தர்ராஜன் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர். இந்த பயணம் இரண்டு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மேம்பட செய்துள்ளது. கப்பலில் வரிவிலக்குடன் உயர்தர மதுபானங்கள் விற்பனை, துரித உணவு மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை, இலவச வைபை என சிறப்பு ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா சலுகையாக மாணவர்கள் மூன்று பகல், இரண்டு இரவு இலங்கையில் தங்குவதற்கு ரூ.9 ஆயிரத்து 999 என சிறப்பு சலுகை திட்டம் உள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும். இந்த திட்டம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் செல்லும் மாணவர்களுக்கும், அதேபோல் இலங்கையில் இருந்தும் இந்தியாவுக்கு வரும் மாணவ மற்றும் மாணவிகளுடன் இரண்டு ஆசியர்களுக்கு இலவசம் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுங்க துறை அதிகாரிகள் ஜீலியன் ராஜ், நாகைப்பட்டினம் துறைமுகம் அதிகாரிகள் மானேக்ஷா, சுபம் கப்பல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள்

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *