துணிச்சல்மிக்க ஊடகத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கியவர் புவி ரஹ்மதுல்லாஹ்; ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்
வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமாகிய புவி ரஹ்மதுல்லாஹ் அவர்களது மரணம் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்ட வார உரைகல் பத்திரிகை அப்பிரதேசத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் அநியாயத்தை தட்டிக் கேட்பதிலும் அவர் மிகுந்த நெஞ்சுரத்துடன் செயற்பட்டார். வயதான காலப் பகுதியில் கூட செய்திகளை சேகரித்தல், தட்டச்சு செய்தல், வடிவமைத்தல், அச்சடித்தல், விநியோகித்தல் என அனைத்தையும் தனி மனிதனாக முன்னெடுத்த அவரது திறமை மெச்சத்தக்கதும் இளம் ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரிமிக்கதாகும்.
தனது எழுத்துக்களுக்காக அவர் பல தடவைகள் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளதுடன் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளார். சட்ட ரீதியான சவால்களையும் எதிர்கொண்டுள்ளார்.
நீண்ட காலமாக தளர்வுற்றிருந்த நிலையில் நேற்று இவ்வுலகை விட்டும் பிரிந்த அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை அருள வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
என்.எம். அமீன்
தலைவர்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்