அனுராதபுரத்தில் புதையல் தோண்டிய டி.ஐ.ஜி மனைவி உட்பட 8 பேருக்கு விளக்கமறியல்…!
அனுராதபுரம் ஸ்ரீ ராவஸ்தி புர பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி உட்பட எட்டு பேர் எதிர் வரும் 26 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் தலைமையக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டு (15) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ ராவஸ்தி புர திம்பிரிகடவல பகுதியில் அமைந்துள்ள ஒரு விகாரைக்கு அருகிலுள்ள இடமொன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அனுராதபுரம் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு பெண் உட்பட்ட எட்டுப் பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை , மாளிகாவத்தை ,பதவி ஸ்ரீ புர ,கிராந்துருகோட்டை , மற்றும் வரகாபொல ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன்னரும் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் உட்பட்ட எட்டுப் பேரும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர் வரும் 26 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்குமாறு கோரி அழுத்தம் கொடுக்கப்பட்ட தாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான உண்மைகள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டு தொடர்புடைய தொலைபேசி தரவுகள் பெறப்படும் என்றும் பொலிசார் தெரிவித்தனர்