முஸ்லிம்களிடம் ஹர்தலுக்கு உதவி கேட்கும் தமிழரசு கட்சி
முஸ்லிம் விரோத செயல்களை கை விட முன்வர வேண்டும் : மு.காவுக்கும் பாடம் எடுத்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு !
இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பை யேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ஆதரிக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனினால் பகிரங்கமாக அறிவிப்பு விடுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் எனும் கோட்பாட்டையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் எனும் கோட்பாட்டை அறிவித்திருக்கும் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள ஹர்த்தால் அறிவிப்பை ஆதரிப்பதை முஸ்லிம் சமூகம் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
தமிழ் மக்களின் காணி, உரிமைகள் பற்றி பேசும் தமிழ் தலைவர்கள் விடுதலைப்புலிகளினால் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகள், உடமைகளை பற்றியோ முஸ்லிங்களுக்கு கடந்த யுத்த காலத்தில் நடந்த அநீதிகளை பற்றியோ பேசுகிறார்கள் இல்லை.ஹாஜிகளின் கொலை, காத்தான்குடி, ஏறாவூர், மூதூர், கிண்ணியா, அணஞ்சிப்பத்தான உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த அராஜக கொலைகளை, ஆட்கடத்தல்களை பற்றியோ, வடக்கு முஸ்லிங்களை பலவந்தமாக வெளியேற்றியதை பற்றியோ, முஸ்லிங்களின் காணிகள் மற்றும் உடைமைகளை கையகப்படுத்திய விடயங்கள் பற்றியோ தமிழ் தலைவர்கள் முஸ்லிங்களுக்கு ஆதரவாக பேசாத நிலை இருப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிட முடியாது என்பதை நினைவு படுத்துகிறேன்.
ஹர்த்தால் செய்து அரச நிர்வாகத்தை முடக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி முஸ்லிங்களிடம் ஆதரவு கேட்க முன்னர் முஸ்லிம்களின் நியாயங்களை தமிழரசுக் கட்சி மறுப்பதை கைவிட வேண்டும். கல்முனையை துண்டாடவும், மட்டக்களப்பில் முஸ்லிங்களுக்கு அப்பட்டமாக அநியாயம் செய்வதையும், திருகோணமலை மாவட்டத்தில் மற்றும் வடக்கில் முஸ்லிம்களின் அபிலாசைகள், உரிமைகளை பெற தடையாக இருப்பதையும் முதலில் தமிழரசு கட்சி கைவிட வேண்டும். அதன் பின்னரே முஸ்லிம்களிடம் உதவிக்காக கை நீட்ட வேண்டும்.
கடைகள் மற்றும் தொழில்களை மூடுவதன் மூலம் இந்த ஒற்றுமை போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்து தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கோரும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிங்களுக்கு தமிழ் தலைவர்களினால் நடக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
