தென்கிழக்கு பல்கலையில் கல்முனை ஜிப்ரியின் சாதனை..!
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் பீடத்தில் சிவில் பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரியும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம். ஜிப்ரி பொறியியல் பாடங்களுக்களுக்கான ஆய்வகப் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பீம் வளைவு விலகல் அளவீட்டுக் கருவி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இவரின் இப்புதிய படைப்பானது பலகலைக்கழக வரலாற்றில் பொறியியல் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுவதுடன் பல மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த இவ்வுகரணம் உள்நாட்டு மூலதனங்களைக் கொண்டு அறிவு நுட்பத்தினூடாக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டிருப்பது பல்கலைக்கழக மட்டத்தில் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
இக்கருவி உருவாக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட அர்ப்பணிப்பு முயற்சிகளும், தொழில்நுட்ப நிபுணத்துவமும், தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் பீட இளங்கலை மாணவர்களுக்கான கற்றல் சூழலை கணிசமாக மேம்படுத்தியுள்ளதுடன், ஆய்வக அடிப்படையிலான கல்வியின் முன்னேற்றத்திற்கும் வகிபங்கு வகித்துள்ளது.
அத்துடன், இத்தகைய முயற்சிகள் பல்கழைக்கழகத்திற்குள் நேரடிக் கற்றலை ஊக்குவிப்பதிலும், புதுமை மற்றும் தன்னம்பிக்கைக் கலாசாரத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்குமென சாதனையாளரான தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜிப்ரிக்கு வழங்கியுள்ள ஊக்குவிப்புப் பாராட்டுப் பத்திரத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைத்தீன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய கருவியை உருவாக்கி சாதனைபடைத்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜிப்ரிக்கான பாராட்டு வைபவம் அண்மையில் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இடம்பெற்றுள்ளதுடன், துறைசார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழச் சமூகம் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சாதானையாளருக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


