சுதந்திர தினத்தையொட்டி இந்திய முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதருக்கு தமிழக முதல்வரின் விருதும் ரொக்கப் பணமும்..!
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார். தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்தபோது அவரை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.
கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு வந்திறங்கினார். அவரை தலைமைச் செயலாளர் முருகாணந்தம் வரவேற்றார். பின்னர் அங்கிருந்த முப்படைகளின் அதிகாரிகள், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) அருண் ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்வரை தலைமைச் செயலாளர் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்றனர்.
இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய அவர் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார். தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார். தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். தமிழ்நாடு அரசின் சார்பில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருதை முதலமைச்சர் வழங்கினார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் இறகுப் பந்தாட்ட வீராங்கனையான துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
டி.எஸ்.பி. பிரசன்னகுமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
காகர்லா உஷா, கணேசன், லட்சுமி பிரியா, ஆனந்த், அண்ணாதுரைக்கு நல்லாளுமை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 பேருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருதுகள் வழங்கப்பட்டன. உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமாருக்கு நல்லாளுமை விருதை வழங்கப்பட்டது. வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது. லட்சுமி பிரியா, ஆனந்த், அண்ணாதுரை, கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழி உலகாளவிய மேம்பாட்டுக்காக தமிழ் இணையக் கல்வி கழக இணை இயக்குநர் கோமகனுக்கு விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சுதந்திர தின விழாவை காண பல தரப்பினரும் கோட்டை அருகே ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)



