உள்நாடு

உள்ளுரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை. அத்தகைய உற்பத்திகளை அனைவரும் ஊக்கவிக்க வேண்டும்..! -மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி

உள்ளுரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை. அத்தகைய உணவு உற்பத்திகளை அனைவரும் ஊக்கவிக்க வேண்டும்;” என மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி சந்திரசேகரம், வேண்டுகோள் விடுத்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் ஊக்கமளிக்கப்படும் சஞ்சீவி போஷாக்கு உணவு உற்பத்திகளை மக்களுக்கிடையே அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஏறாவூர்ப் பறறுப் பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி நகரத்தில் இடம்பெற்றபோது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் மாவட்ட நிருவாக அலுவலர் கே. நிர்மலா, தலைமையில் செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளுர் பாரம்பரிய போஷாக்கு உணவுப் பொருள்கள் விற்பனையும் இடம்பெற்றது.
நிகழ்வைத் துவக்கி வைத்து தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி,
நலிவுற்ற குடும்பங்களை முதன்மைத் தெரிவாகக் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் செழிமையாக்கும் நோக்கில் விழுது நிறுவனம் செயற்பட்டு வருகின்றது. அமரர் சாந்தி சஞ்சிதானத்தின் இந்தக் கனவு காலங்கள் கடந்தும் உயிர்ப்புடன் உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஆரம்பித்து வைத்த நலிவுற்ற மக்களின் நலன் சார்ந்த திட்டங்களால் இன்றுவரை நன்மையடைந்து கொண்டிருப்போர் ஏராளம்.
நலிவுற்ற பெண்களிலிருந்து பெண் தொழில் முயற்றியாளர்கள் சஞ்சீவி இயற்கை போஷாக்கு உணவு உற்பத்திகளை மேற்கொண்டு ஆரோக்கியத்திற்கு வழிகோலுவதுடன் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள முடியும்.
உள்ளுரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை. அவற்றை மீண்டும் ஊக்குவிக்க வேண்டும். சிறந்த ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு முக்கியம். இதன் மூலம் எதிர்கால சந்ததிiயும் ஆரோக்கியமுள்ளதாக உருவாக்க முடியும். உள்ளுரில் இலாபமாகக் கிடைக்கக் கூடிய அத்தகைய உணவு உற்பத்திச் செயற்பாடுகளை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசிங்கம், முன்னாள் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான சட்டத்தரணி அன்பழகன் குரூஸ், சுகாதாரத் திணைக்கள அலுவலர்கள், விவசாயத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவன சமூக ஒருங்கிணைப்பாளர் கே. லக்ஷானா, முன்னாள் திட்ட அலுவலர் புண்ணியமூர்த்தி ஜீவிதா, சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், இளந்தளிர் ஈகுவாலிற்றி கழக சிறார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தன்னார்வத்; தொண்டு நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பின்தங்கிய, அடிமட்ட கிராம மக்களின் கல்வி, சுகாதாரம், போஷாக்கு, தொழில்வாய்ப்பு, பெண்கள் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், நல்லாட்சி, சகவாழ்வு போன்ற விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்து வருவதாகவும், ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்காக நீடித்து நிலைக்கும் வாழ்வாதார விவசாய செயல்திட்டங்களைத் துவங்கியுள்ளதாகவும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *