புத்தளம் பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்
புத்தளம் போல்ஸ் வீதியில் இயங்கி வருகின்ற பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (13) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மிக விமரிசையாக இடம்பெற்றது.
பாடசாலையின் பணிப்பாளர் சப்ரினா இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் உதவி பணிப்பாளர்களான செய்த் அப்கர், செய்த் சாபிக் மற்றும் இணைப்பாளர் சமீர் இக்பால் ஆகியோரது வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
பிலேர்ஸ் பேர்னர்ஸ் (BLAZE BURNERS) மற்றும் கிளேசியர் கிளைடர்ஸ் (GLACIER GLIDERS) ஆகிய இரு இல்லங்களை சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
சாக்கு ஓட்டம், போத்தலில் நீர் நிறைத்தல், பலூன் உடைத்தல், அஞ்சல் ஓட்டம், புகையிரத வண்டி ஓட்டம், பொருட்களை சேகரித்தல்
பெற்றார்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளோடு கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற டைக்வுண்டோ சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை நாட்டுக்கு பெருமையை பெற்று தந்த இந்த பாடசாலையின் வெற்றி வீரர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களின் டைக்வுண்டோ மாதிரி போட்டிகளும் மைதானத்தில் அரங்கேற்றப்பட்டன.
இதில் குறிப்பாக பாடசாலையின் முதலாம் தர மாற்றுத்திறனாளி மாணவன் அவ்வாப் நூமானின் விநோத விளையாட்டு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நடைபெற்ற போட்டிகளின் பிரகாரம் கிளேசியர் கிளைடர்ஸ் (GLACIER GLIDERS) இல்லம் முதலாம் இடத்தையும், பிலேர்ஸ் பேர்னர்ஸ் (BLAZE BURNERS) இல்லம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. சம்பியன் கிண்ணத்தை அணியின் தலைவி எம்.எப்.சிம்னா மர்யம் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் எம்.எப்.ரின்சாத் அஹ்மத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மாநகர சபை உறுப்பினர் அனூஷா ஸ்ரீவர்த்தன, புத்தளம் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர, புத்தளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி குலதுங்க, புத்தளம் காற்பந்தாட்ட சங்க தலைவர் முஹம்மது யமீன் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள், முன்பள்ளிகளின் ஆசிரியைகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
போட்டிகள் யாவற்றுக்கும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியரான கலாநிதி எஸ். ஆர்.எம்.ஆஷாத் தலைமையிலான விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் நடுவர்களாக கடமையாற்றினர்.
















(எம்.யூ.எம்.சனூன்)