“ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்” ; காத்தான்குடி மீடியா போரம் கண்டனம்
“ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்.” என காஸாவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையைக் கண்டித்து காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் புதன்கிழமை (13) வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காஸா பகுதியில் நிகழும் மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நடைபெறும் உண்மையான நிலவரங்களை வெளி உலகிற்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மீதும் இஸ்ரேல் வேண்டுமென்றே நடத்திய நடாத்திக்கொண்டிருக்கும் தாக்குதலை காத்தான்குடி மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஊடகவியலாளர்களை மௌனப்படுத்துவதன் மூலம் உண்மைகளை மூடி மறைக்க முடியாது. அவ்வாறு கருதுவது பகல் கனவாகும். உண்மை எப்போதும் வெளிச்சத்திற்கே வரும்; அதை மறைக்கும் எந்த முயற்சியும் இறுதியில் தோல்வியடையும்.
மேலும், நிராயுதபாணிகளான அப்பாவி காஸா மக்களை நோக்கி தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றின் ஆவணப்படுத்தலிலும், தகவல் பரப்புதலிலும் முன்னிலையில் இருந்த ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது, ‘இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்.’
ஊடகவியலாளர்கள் என்போர் சமூகத்தின் கண்களாவர், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை உண்மை உயிருடன் இருக்கும். அவர்களை இலக்கு வைப்பது என்பது உண்மையை அழிக்க முயலும் குற்றச் செயலாகும்.
உலக நாடுகள், சர்வதேச ஊடக அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு குழுக்கள் ஆகியவை உடனடியாக இந்தத் தாக்குதலைக் கண்டித்து, குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என காத்தான்குடி மீடியா போரம் கேட்டுக்கொள்கிறது எனவும் அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.பஹத் ஜுனைட்)