1990ஆம் படுகொலை செய்யப்பட்ட 35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகள் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவை ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் எஸ்.எம்.நழீம், நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், உட்பட படுகொலை செய்யப் பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினத்தையிட்டு ஏறாவூர் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.
ஏறாவூர்ப் படுகொலைச் சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்புகளுக்கும், துயரங்களுக்கும் நீதி மற்றும் நிவாரணம் கோரி ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.நழீமி னால் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் –
ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச எல்லைகளை விரிவுபடுத்த நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம், மக்களின் தேவைகளைப் பாதுகாப்பதில் சிவில் சமூகங்களும் அமைப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. அவர்கள் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதால், அவர்கள் மக்களிடையே பிரபலமாக உள்ளனர்.
சிவில் சமூகங்களும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றால், அவர்கள் தங்கள் முக்கிய வகிபாகத்தை திருப்திகரமாக ஆற்ற முடியும்.
எனவே, 11.08.1990 அன்று மற்றும் ஏறாவூர் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 121 ஏறாவூர் முஸ்லிம்களின் நினைவு நாளில், எங்கள் மனமார்ந்த வேண்டுகோளை பரிசீலிக்குமாறு நாங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகளின் கைகளில் முஸ்லிம்களாக இருந்ததற்காக அவர்கள் தங்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அநியாயக் கொலைகள் மற்றும் அவர்களின் இழப்பீடு மற்றும் விவசாய நிலம் மற்றும் எல்லை உணர்திறன் விடயத்தில் எங்கள் மக்களும் நாங்களும் நீதிக்காக வேண்டிநிற்கிறோம்.” என்றவாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.







(ஏ. எச். ஏ. ஹுசைன்)