சவூதி அரேபிய சிறைகளில் 10,000 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள்..!
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள 24 நாடுகளில் மொத்தம் 15,953 பாகிஸ்தானியர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திங்களன்று (11) பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் பெரும்பாலானோர் அதாவது 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் சவுதி அரேபிய சிறைகளில் உள்ளனர்.
வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கையை பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இஷாக் தார் வழங்கினார். 10,279 பாகிஸ்தானிய கைதிகளுடன் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து 3,523 பாகிஸ்தானியர்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் 581 பாகிஸ்தானியர்கள் உள்ளனர், அதே நேரத்தில் கட்டாரில் 599 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர்.
459 பாகிஸ்தானியர்கள் மலேசியாவிலும், 81 பேர் ஈராக்கிலும், 252 பேர் ஓமனிலும், 50 பேர் குவைத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் மேற்படி தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டமைக்கான குற்றங்கள் தேசிய சட்டமன்ற பேரவை அமர்வில் குறிப்பிடப்படவில்லை, எனினும் இதுபோன்ற சிறைவைப்புக்களுக்கு பெரும்பாலும் குடியேற்ற விதி மீறல்கள், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் ஆகியவை அடங்கும்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது எனவும், இதன் மூலம் சில கைதிகள் பாகிஸ்தானில் மீதமுள்ள தண்டனைக் காலத்தினை அனுபவிக்க முடியும் எனவும் இஷாக் தார் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், பாகிஸ்தானியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏனைய 21 நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை, இது அவர்களின் மீள பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது
இந்த புள்ளிவிவரங்கள் பாகிஸ்தானியர்கள் எதிர்கொள்ளும் வெளிநாட்டு சிறைவாசத்தின் அளவை சுட்டிக் காட்டுகின்றன, மேலும் வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதி செய்ய இராஜதந்திர ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
(எம்.ஐ.அப்துல் நஸார்)