உலகம்

காஸாவில் அல் ஜஸீரா ஊடகவியலாளர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டமைக்கு உலகளாவியரீதியில் கண்டனங்கள்..!

காஸாவில் இஸ்ரேலியப் படைகள் அல் ஜஸீராவின் முக்கிய ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது நான்கு நண்பர்களைக் கொன்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன, மேலும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை இஸ்ரேல் வேண்டுமென்றே குறிவைத்ததாக ஏனைய ஊடகவியலாளர்;, மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காஸாவில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியபோது, ஊடகவியலாளர் முகமது கிரீகே மற்றும் ஒளிப்பதிவாளர்களான இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் மற்றும் மோமென் அலிவா ஆகியோருடன் அல்-ஷெரீப் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீன சுதந்திர ஊடகவியலாளர்; முகமது அல்-கல்டியும் கொல்லப்பட்டதாக காஸாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது, இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலியப் படை ஒப்புக்கொண்டுள்ளதோடு அல்-ஷெரீப் ஒரு ‘பயங்கரவாதி’ எனவும் குற்றம் சாட்டி உள்ளது.

காஸாவில் அல் ஜஸீராவின் மிக முக்கியமான ஊடகவியலாளர் ஒருவரின் ‘ஒப்புக்கொள்ளப்படத்தக்க கொலை’ என இஸ்ரேல் வருணித்துள்ளதை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, கண்டித்துள்ளதோடு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அவரையும் ஏனையவர்களையும் வேண்டுமென்றே குறிவைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது. 

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, இக் கொலையால் ‘திகைத்துப் போனதாக’ தெரிவித்துள்ளது, அல்-ஷெரிப் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர் என்ற இஸ்ரேலிய கூற்றுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்வும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

‘நம்பகமான ஆதாரங்களை வழங்காமல் ஊடகவியலாளர்களை பயஙகரவாதிகளாக முத்திரை குத்தும் இஸ்ரேலின் செயற்பாடு, ஊடக சுதந்திரத்திரம், அதன் நோக்கம் மற்றும் மரியாதை தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது’ என மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் பணிப்பாளர் சாரா ஹுதா தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர்; வோல்கர் டர்க்கின் அலுவலகம் திங்களன்று இதேபோன்ற கண்டனத்தை வெளியிட்டது, இஸ்ரேல் காஸாவில் ஆறு ஊடகவியலாளர்களை வேண்டுமென்றே கொலை செய்தது ‘சர்வதேச மனிதாபிமான சட்டத்தினை கடுமையாக மீறும் செயலாகும்’ என தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் அல்-ஷெரீப் ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் அவிச்சாய் அத்ரே எக்ஸ் தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவும் ஏனைய அமைப்புகளும் அவர் மீதான அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்து சில வாரங்களுக்குப் பின்னர் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஐ.நா.வின் கருத்துச் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஐரீன் கான் அந்தக் கூற்றை ‘ஆதாரமற்றது’ எனவும் ‘ஊடகவியலாளர்கள் மீதான அப்பட்டமான தாக்குதல்’ எனவும் அப்போது கூறியிருந்தார். 

ஞாயிற்றுக்கிழமை இரவு, இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தியது, அல்-ஷெரீப் ‘ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர்’ எனவும், ‘அல் ஜஸீரா ஊடகவியலாளராகக் காட்டிக் கொண்டு இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் படையினர்; மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாகவும்’ தெரிவித்தது.

‘காஸாவில் இருந்து உளவுத்துறை மற்றும் ஆவணங்கள்’ – பட்டியல்கள், பயிற்சி பட்டியல்கள் மற்றும் சம்பளப் பதிவுகள் உட்பட சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாத ஆலணங்களை அது மேற்கோள் காட்டியது.

இஸ்ரேல் பெரும்பாலும் ஆதாரமின்றி இதேபோன்ற கூற்றுக்களை கூறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, சுயாதீன வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காஸாவிற்குள் நுழைய இயலாமையால் இது வலுப்படுத்தப்படுகிறது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை சில வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அந்த பகுதிக்குள் அனுமதிக்கும் திட்டங்களை அறிவித்தார், ஆனால் இராணுவப் பாதுகாப்புடன் மட்டுமே அங்கு செல்ல முடியும், இந்த நிபந்தனை ஊடக சுதந்திரத்தின கட்டுப்படுத்தும் செயற்பாடு என ஊடக அமைப்புக்கள் எச்சரிக்கின்றன.

இஸ்ரேலின் 22 மாத காஸா முற்றுகை தொடங்கியதிலிருந்து, டெல் அவிவ் கிட்டத்தட்ட 200 ஊடகவியலாளர்களைக் கொன்றுள்ளது, மேலும் உரிமைகள் குழுக்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வேண்டுமென்றே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அல்-ஷெரீப், க்ரீகே, ஜாஹர், நௌபால் மற்றும் அலிவா ஆகியோருக்கு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்திவருவதோடு, பலர் பொறுப்புக்கூறலைக் கோருகின்றனர்.

அல்-ஜஸீராவிடம் பேசிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கென் ரோத், அட்டூழியங்கள் பற்றிய செய்திகளை வெளிவராமல் தடுப்பதற்காக ஊடகவியலாளர்களைக் கொல்வது ‘வெறுக்கத்தக்க காரணம்’ என தெரிவித்தார்.

‘இது ஒரு இலக்கு வைக்கப்பட்ட கொலை,’ என ரோத் தெரிவித்தார். அல்-ஷெரீப் ஹமாஸின் ஒரு பிரிவை வழிநடத்தினார் என்ற இஸ்ரேலின் ‘ஆதாரமற்ற, ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகள்’ ‘பயனற்றவை’.ஆகும். 

‘அவருக்கு எதிரான துன்புறுத்தல் அவரை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் என்பன நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்கள் என்பதைத் தெளிவாக்குகின்றது,’ என ரோத் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அல் ஜஸீரா செய்தியரியரும் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளருமான பாரி மலோன், அல்-ஷெரீப்பை காஸாவில் ‘எங்கள் கண்கள்’ என்று விபரித்தார், இது அவரது செய்திக்கு ‘சிறந்த உணர்ச்சியையும் ஆழத்தையும்’ கொண்டு வந்தது.

புலிட்சர் பரிசு பெற்ற பாலஸ்தீன கவிஞரும் முன்னாள் இஸ்ரேலிய கைதியுமான மொசாப் அபு தோஹா இதனை மேற்கத்திய ஊடகங்களின் ‘காது கேளாத மௌனம்’ என்று குற்றம் சாட்டினார். ‘அவர்களில் யாரும் அனஸின் பாதுகாப்புக்காகவோ அல்லது திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கோ கவலை தெரிவிக்கவில்லை’ என தெரிவித்தார்.

‘இந்த மௌனம் நடுநிலைமை அல்ல. இது உடந்தையாக இருப்பது’ என்று அவர் எக்ஸ் வலைத் தளத்தில் இட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்

அமெரிக்க பிரதிநிதி பிரமிளா ஜெயபாலும் கொலையைக் கண்டித்து, இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு வாஷிங்டனை வலியுறுத்தினார்.

ஏப்ரல் 6 அன்று எழுதப்பட்டு மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அல்-ஷெரீப்பின் இறுதிச் செய்தி, அவரது மனைவி உம் சலா (பயான்), அவரது மகன் சலா மற்றும் அவரது அன்புக்குரியவர்களுக்காக எழுதப்பட்ட செய்தியில் பாலஸ்தீனத்தின் விடுதலையினை வலியுறுத்தியிருந்தார்.

‘இதுதான் என்னுடைய விருப்பமும், என்னுடைய இறுதிச் செய்தியும். இந்த வார்த்தைகள் உங்களைச் வந்தறடைந்தால், இஸ்ரேல் என்னைக் கொன்று என் குரலை அடக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

‘நான் அனைத்து விதமான வலிகளையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன், பலமுறை துன்பத்தையும் இழப்பையும் ருசித்திருக்கிறேன், ஆனாலும் திரிபு அல்லது பொய்மைப்படுத்தல் இல்லாமல் உண்மையை அப்படியே வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்கியதில்லை.

‘காஸாவை மறந்துவிடாதீர்கள். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் உண்மையான பிரார்த்தனைகளில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்’ என அவர் தனது இறுதிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

(எம்.ஐ.அப்துல் நஸார் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *