Tuesday, August 12, 2025
Latest:
உள்நாடு

மக்கா நகரில் இன்று நிறைவடையும் மன்னர்அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி; வெலிகம பாரி அரபிக் கல்லூரி மாணவர்அல் ஹாபிழ் ஸஃத் அப்துர் ரஹ்மான் பங்கேற்பு

“அல் குர்ஆன், அஸ்ஸுன்னாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆல் ஸஊத் பரம்பரையினர்.”

சவுதி அரேபியாவின் முதல் மன்னர் உட்பட ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் காலம் தொட்டு தற்போது ஆட்சி செய்கின்ற இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரும் சவுதி மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் காலம் வரை அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவுக்கு மிக முக்கியத்துவம் வழங்குபவர்களாகவும், அவற்றைப் போதிக்கின்றவர்களாகவும், அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குபவர்களாகவும், அவற்றுக்கு பாதிப்புகள் வரும் போதெல்லாம் பாதுகாக்கும் அரண்களாகவும், பல மில்லியன்கள் அச்சிட்டு உலக முஸ்லிம்களின் ஒவ்வொரு வீடுகளிலும் கிடைக்கச் செய்கின்ற வேலைகளைச் செய்பவர்களாகவும், முஸ்லிம் அல்லாதோருக்கு அவரவர் மொழிகளில் மொழிபெயர்ப்புகளாகவும், வருடாவருடம் புனித மக்காவிலும் ஏனைய நாடுகளிலும் தேசிய சர்வதேச போட்டிகள் நடாத்தி அல் குர்ஆன் அஸ் ஸுன்னாவை உலகமயப்படுத்தி அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கும் சிறந்த ஆட்சியாளர்களாக ஆல் ஸஊத் பரம்பரையினர் இருந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வருடாவருடம் புனித மக்காவில் மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், சவுதி இஸ்லாமிய விவகார அமைச்சர் அப்துல் லத்தீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக்கின் மேற்பார்வையிலும் அவர்களது தலைமையிலும் நடத்தப்படுகின்றது.

அந்த வகையில் இம்முறை 45வது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி 45வது வருடமாக நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் உலகின் 128 நாடுகளில் இருந்து குர்ஆனை மனனம் செய்த சர்வதேச போட்டியாளர்கள் பங்கேற்கும் இப்போட்டி கடந்த 09 ஆம் திகதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்று இன்று 12 ஆம் திகதி மக்கா நகரில் நிறைவடைகிறது. இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெலிகம பாரி அரபிக் கல்லூரி மாணவர் அல் ஹாபிழ் ஸஃத் அப்துர் ரஹ்மான் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சர்வதேச போட்டியில் வெற்றியீட்டுபவர்களுக்கு சவுதி அரேபிய அரசினால் பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படுவது வழமையாகும். இதன் நிமித்தம் இலங்கை நாணயப்படி 35 கோடி ரூபாவை பரிசில்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள சவுதி அரேபியா இப்போட்டியில் முதலாமிடத்தைப் பெறும் அதிஷ்டசாலிக்கு 4 கோடி ரூபாவை பணப்பரிசிலாக வழங்கும்.

புனித அல் குர்ஆன் ஏக அல்லாஹ்விடமிருந்து மனித சமூகத்துக்கு நேர்வழி காட்ட வந்த இறைவேதமாகும். நேர்வழியை நாடக்கூடியவர்களுக்கு அல் குர்ஆனில் நேர்வழி இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதரும் சான்று பகர்கின்றனர். உலகம் அழியும் வரை இப்புனித அல் குர்ஆன் உலக மக்களுக்கு நேர்வழி காட்டிக் கொண்டே இருக்கும். இதை வாழும் அற்புதமாகவே அல்லாஹ் ஆக்கியிருக்கிறான்.

அந்த வகையில் அல் குர்ஆனுக்கும் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய அனைத்து கண்ணியங்களையும் கௌரவங்களையும் சவுதி அரசாங்கம் அன்று தொட்டு வழங்கி வருகிறது. அல் குர்ஆனின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் மகத்தான பணியை சவுதி அரேபிய அரசு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. இதன் நிமித்தம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிராந்திய நாடுகளிலும் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் அல் குர்ஆன் மனனப் போட்டிகளை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையிலேயே இம்முறை 9ம் திகதி முதல் மக்காவில் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி நடைபெறுகின்றது.

மேலும் சவுதி அரேபியாவின் நீண்ட கால நட்பு நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாக தேசிய மட்ட அல் குர்ஆன் மனனப் போட்டி இரு தடவைகள் நடாத்தப்பட்டன. சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் மாபெரும் பரிசுத் தொகையிலான இப்போட்டி இந்நாட்டில் நடாத்தப்படுவதற்கான ஒத்துழைப்பையும் ஏற்பாடுகளையும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியும், இந்திய பிராந்திய இஸ்லாமிய விவகார பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் அல் அனஸியும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் பங்குபற்றிய அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் ஒன்றரைக் கோடி ரூபாக்கும் மேல் பெறுமதிமிக்க பரிசில்களை வென்றெடுத்தனர். அத்தோடு இலங்கையில் இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட அல் குர்ஆன் மனனப்போட்டியில் பங்கு பற்றி முதல் மற்றும் மூன்றாம் இடங்களை வென்ற கண் பார்வையற்ற இரு பெண் ஹாபிழாக்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் புனித உம்ரா கிரியை நிறைவேற்றும் வாய்ப்பையும் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி மூலம் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் வழங்கி கெளரவித்தமை இலங்கை முஸ்லிம்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இது போன்ற குர்ஆன் மனனப் போட்டிகளை சவுதி அரேபிய அரசாங்கம் தேசிய, சர்வதேச ரீதியில் நடாத்தி உலக மக்களது நன்மதிப்பைப் பெற்றுள்ளது. உலகில் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ளவும் இலவசமாக புனித மக்காவை தரிசிக்கவும் புனித உம்ராவை நிறைவேற்றவும் வெற்றி பெறும் போது பெறுமதியான பரிசுகள் கிடைக்கவும் வழியமைத்துக் கொடுக்கிறது சவுதி அரேபியா. அதனால் சவுதி அரேபியாவின் இம்மகத்தான பணியை இட்டு உலகின் ஒவ்வொரு முஸ்லிமும் மிக்க மகிழ்ச்சிடைகின்றனர். பலரது நீண்ட நாள் கனவும் இதன் மூலம் நிறைவேறுகிறது எனலாம்.

புனித மக்காவில் நடாத்தப்படும் இப்போட்டி சிறப்பாக நடந்திடவும் இப்போட்டியை சகல செலவுகளுடனும் நடாத்தும் சவுதி அரேபிய மன்னர், இளவரசர் இஸ்லாமிய விவகார அமைச்சர் மற்றும் சவுதி அரேபிய அரசுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியந்திடட்டும்.

மௌலவி எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி (பி.ஏ)
பணிப்பாளர்
அல் ஹிக்மா நிறுவனம்
கொழும்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *