உள்நாடு

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட உறுப்பினர் ஒன்றுகூடலும் பாடசாலை மாணவர் செயலமர்வும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துளள மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்றுகூடல் மற்றும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவ, மாணவிகள், பாடசாலை ஊடக கழகங்களுக்கான ஒருநாள் செயலமர்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025.08.17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 5:00 மணி வரை நீர்கொழும்பு, போருதொட்ட அல் பலாஹ் கல்லூரியில் நடத்த சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் என். எம். அமீன் மற்றும் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம். ஜே. எம். தாஜூதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் இருவேறு அமர்வுகளாக நடைபெறவுள்ள. இந்த நிகழ்வின் மாலை நடைபெறவுள்ள சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முலப்பர் பிரதம அதிதியாகவும், நீர்கொழும்பு மாநகர முதல்வர் ரொபட் ஹீன்கெந்த கௌரவ அதிதியாகவும் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் என். ஏ எம். ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.

பாடசாலை மாணவ, மாணவிகள் மத்தியில் ஊடகம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நவீன உபகரணங்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், பாடசாலைகளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை பிரதான ஊடகங்களுக்கு தெரியப்படுத்தல் அல்லது அறிக்கையிடல், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பன தொடர்பான வழிகாட்டல் பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பயிற்ச்சி திட்டங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவிட் முனவ்வர் மற்றும் ஊடக பயிற்றுவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளருமான இஸ்பஹான் ஷர்ப்டீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி ஊடக செயலமர்வு மற்றும் உறுப்பினர்களின் ஒன்று கூடலுக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான கலாபூஷணம் எம். ஏ எம். நிலாம் மற்றும் போரத்தின் தேசிய அமைப்பாளர் இர்ஷாட் ஏ காதர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அழைப்பிதழ் கிடைத்தவர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *