உள்நாடு

விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை

அட்டாளைச்சேனை,ஒலுவில், தீகவாபி பிரதேசங்களில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி பணிகளுக்கும் முன்னுரிமை வழங்குமாறு விளையாட்டுதுறை மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சின் ஆலோசனைகள் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, ஒலுவில், தீகவாபி பிரதேசங்களில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி பணிகளுக்கும் முன்னுரிமை வழங்குமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சின் ஆலோசனைகள் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் 08/08/2025ம் திகதி நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இக் கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டி தொடக்கம் பானமை வரை அமைந்துள்ள பிரதேசங்களில் அம்பாறையில் மாத்திரம் 400m பொது விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு 400m பொது விளையாட்டு மைதானம் அட்டாளைச்சேனையில் மாத்திரமே அமைந்துள்ளது.

இம் மைதானம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் சுய வளர்ச்சி களமாக அமைந்து வருவதுடன் மாகாண, மாவட்ட மற்றும் வலய மட்ட போட்டிகளும் இவ்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இம் மைதானத்தில் புற்றரைகள் பார்வையாளர்கள் இருப்பறை, பார்வையாளர்கள் மண்டபத்தின் நிறைவு செய்யப்படாத தேவைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. எனவே அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளுக்கு அடுத்த வருட விளையாட்டு துறை நிதி செலவுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இப்போதில் இருந்தே மேற்கொள்ளவேண்டும்.

ஒலுவில் பிரதேச மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை துறைமுக அதிகார சபை, வீடமைப்புத் திட்டம் மற்றும் மாபொல பயிற்சி கல்லூரிகள் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதி காணிகளில் கடல் அரித்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒலுவில் பிரதேச மக்களுக்கான பொது விளையாட்டு மைதானத்திற்காக அட்டாளை சேனைப் பிரதேச சபையினால் ஆறு ஏக்கர் காணி வழங்கப்பட்டு அது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான பணிகளை அடுத்த வருட நிதியில் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்படுவதுடன் தீகவாப்பிய பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் நீண்ட காலமாக புனர்நிர்மானம் செய்யப்படாமல் உள்ளது. தீகவாபிய கிராம இளைஞர்கள் விளையாட்டுத் திறன் பயிற்சி பெறுவதற்காக தீகவாபி விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதை விளையாட்டு துறை அமைச்சு விசேட கவனம் செலுத்தி இவ் விளையாட்டு மைதானம் விருத்தி செய்யப்பட வேண்டும் என்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த விளையாட்டு துறை அமைச்சர்

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்வைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி, ஒலுவில் பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி,
தீகவாபி பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை அடுத்த வருட விளையாட்டுத் துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தார்.

(கே. எ. ஹமீட் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *