Sunday, August 10, 2025
Latest:
உலகம்

இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்..! -தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் 09.08.2025 சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது :
இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *