உள்நாடு

ஆத்மீகத் துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பெருந்தகைசெய்குனா அப்பா (ரஹ்) அவர்கள்..!

தென்னிந்தியா, முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஆத்மீக ஞானி மர்ஹ{ம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹம்மது லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்தமாக வருடாந்த கத்தமுல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ் பேருவளை சீனன்கோட்டை பிட்டவளை சாதுலியா ஸாவியாவில் எதிர்வரும் 10.08.2025 மாலை;; கலீபத்துஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளர் கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இலங்கையில் முதலாவது முஸ்லிம் குடியேற்றம் நிகழ்ந்த ஊர் பேருவளை. பல்வேறு வரலாற்று புகழுடன் திகழும் இந்த பேருவளையில் அமையப் பெற்றுள்ள தனிப்பெறும் முஸ்லிம் கிராமமாக சீனன் கோட்டை திகழ்கிறது. இரத்தினக்கல் வர்த்தகத்தால் இப்பிரதேசம் மேலும் மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஆனமீகம், அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டின் உயர்பிரசித்தி பெற்ற இடமாகவும் வரலாற்றுப் பிரச்சித்தி பெற்ற சீனன் கோட்டை திகழ்கிறது. சர்வதேச வரையும் பேரும் புகழும் பெற்ற ஊராகவும் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதே போன்றே தொன்று தொட்டு ஆன்மீக பெரியார்களும் இங்கு வந்து ஆன்மீகத் துறையிலும் அடித்தளம் பெற்று விளங்கி வருவதும் இப்பிரதேசத்தில் மற்ரொரு சிறப்பாக உள்ளது. குறிப்;பாக நூற்றுக்கு நூறு வீதம் ஷாதுலிய்யா தரீக்கா எனும் ஆன்மீக வழிமுறையை பின்பற்றுவதால் இலங்கை திருநாட்டில் ஷாதுலிய்யா கோட்டை என்றும் வரணிக்கப்படுகின்றது.
இலங்கையிலும் இந்தியாவிலும் புகழ் பூத்த ஆன்மீகப் பெரியாராக விளங்கிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹம்மது லெப்பை ஆலிம் இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவாகவும் அதேநேரம் நக்ஷபந்தியா, ரிஃபாயிய்யா தரீக்காக்களின் கலீபாவாகவும் திகழ்ந்து ஆத்மீகத் துறையில் அளப்பரிய பணியாற்றியுள்ளார். ‘செய்குனா அப்பா” என சிறப்பாக அழைக்கப்படும் இவர், இந்தியாவின் முத்துப்பேட்டையில் கி.பி. 1856இல் பிறந்துள்ளார்கள்.
சிறு வயது முதல் இவருக்கிருந்த ஆத்மீகத் துறை ஆர்வம் காரணமாக கேரள மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள உலமாப் பெருந்தகைகளிடம் சன்மார்க்கக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார்கள்.
தொடர்ந்தும் கல்வி பெறும் ஆவலில் மக்கள் மக்கா நகருக்குச் சென்று அங்குள்ள மத்ரஸத்துல் சவ்லத்தியத்தில் சுமார் பத்தாண்டுகள் தங்கியிருந்து சன்மார்க்கத் துறையில் ஆழமான அறிவைப் பெற்றுக் கொண்டார்கள். பின்னர், மதீனா முனவ்வராவிலும் மேலும் உயர் கல்வியைப் பெற்றுத் தேறினார்கள்.
மக்காவில் முப்தி அஷ்ஷெய்யித் இப்னு ஜைனி தஹ்லான் (ரஹ்), ‘ஷெய்குல் இஸ்லாம்’ முஹம்மது அப்துல் காதிர் அல்யமனீ உள்ளிட்ட இறை நேசப் பெரியார்கள் பலரிடம் சன்மார்க்கக் கல்வியைப் பெறும், பெரும்பேற்றினையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
பின்னர் மக்கா மதரஸாவில் சிறிது காலம் உஸ்தாத்தாகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மத்ரஸாவின் பெரியார்களது நல்லாசிகளைப் பெற்று, மக்காவிலேயே திருமணமும் செய்து கொண்டார்கள்.
இதனைப் பெற்றோருக்கும் தெரிவித்தார்கள். ஆனாலும் தன் மகனை நிரந்தரமாக விட்டுப் பிரிந்திருக்க மனமின்றி தாயார், எப்படியும் தன் மகனை வரவழைக்க பல வழிகளிலும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவற்றுள் ஒன்றாக தனக்கு நன்கு அறிமுகமான இலங்கை தர்கா நகரிலிருந்து ஹஜ் கடமை செல்லும் பாவா ஆலிம் சாஹிப், செய்குனா இஸ்மாயில் ஹாஜியார் ஆகியோருக்கு உருக்கமான கடிதம் அனுப்பி எப்படியாவது மகனை அழைத்து வரும்படி கேட்டுள்ளார்.
செய்குனா இஸ்மாயில் ஹாஜி, மக்காவில் குறிப்பிட்ட செய்குனாவைக் கண்டு பிடித்தார்கள். அவரது உஸ்தாத் அல்லமா அஷ்ஷெய்யித் ஜெய்னீ தஹ்லான் அவர்களிடம் தாயாரின் கடிதத்தை மொழிபெயர்ப்பு செய்து கொடுத்து நிலைமையைத் தெளிவுபடுத்தினார்கள். அதன் விளைவாக மகனை அழைத்து வருவதில் வெற்றி கண்டார்கள். அதுவும் உஸ்த்தாதின் அறிவுரைப்படி நஷ்ட ஈடு கொடுத்து மக்கத்து மனைவியை விவாகரத்துச் செய்த பின்னர் நாடு திரும்பினார். பெற்றோரின் விருப்பத்தின் பேரில் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த முஹம்மது மரியம் என்ற பெண்ணை மணந்தார். இத்தம்பதிக்கு 7 ஆண்களும் 3 பெண்களுமாக பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். மர்யம் மரணித்ததன் பின்னர் முஹம்மது சாரா என்ற பெண்ணை மணந்து இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் தந்தையானார். குடும்பச் செலவை சீராக நடத்துவதற்காக இலங்கை வந்து மாணிக்கம் மற்றும் அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டார்.
மக்காவில் கற்கும் காலத்தில் நட்புக் கொண்ட இலங்கை சீனன் கோட்டை மாணிக்க வர்த்தகரான நெய்னா மரிக்கார் அப்துல் காதிர் ஹாஜியார் மூலமாக இலங்கை வந்து மற்றொரு பெரிய மாணிக்க வியாபாரியான ஹஜ்ஜு மரைக்கார் உமர் லெப்பையின் வீட்டிலே செய்குனா தங்கியிருந்து வர்த்தகத்தைச் செய்து வந்தார். இச்சந்தர்ப்பத்தில் சீனன் கோட்டை குட்டி மலை பள்ளிவாசலில் 40 தினங்கள் ‘கல்வத்’ எனும் இறை தியானத்தில் ஈடுபட்டார். பஞ்சு மரிக்கார் ஹஜ்ஜு மரிக்காரின் வபாத்தின் பின்னர், செய்குனா அவர்கள் சீ. எம். எச். சாலிஹ் ஹாஜியார் மற்றும் தர்கா நகரைச் சேர்ந்த செய்கு இஸ்மாயில் ஹாஜியார் ஆகியோரின் வீடுகளில் தங்கியிருந்தார்கள். இறுதிக் காலத்தில் கொழும்பு மாக்கான் மரிக்கார் அவர்களது இல்லத்திலும் தங்கியிருந்துள்ளார். அக்காலத்தில் சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரி அதிபர் மௌலானா முஹம்மது மதார் ஆலிம் சாஹிப் மற்றும் அங்கு ஆசிரியராகவுள்ள மௌலானா முஹியத்தீன் ஆலிம் சாஹிப் ஆகியோர் செய்குனாவின் மாணவர்களாவார்கள். அதனால் அவர்கள் மூலமாக செய்குனாவின் மேதைத்தன்மையை அங்குள்ள கொடை வள்ளல் ஜமால் முஹிய்யித்தீன் சாஹிப் அறிந்து, செய்குனாவை சென்னைக்கு அழைத்து அவருடன் முத்து வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள்.
அத்துடன் ஜமாலியாவிலும் செய்குனா அவர்கள் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் அதிராம்பட்டினம் வந்து, தனது வீட்டுத் திண்ணையில் ‘அல் மத்ரஸத்துர் ரஹ்மானியா’ என்ற பெயரில் மத்ரஸா ஒன்றை நிறுவினார்கள். அங்குள்ள தனவந்தர் களில் ஒருவரான மீ. மு. முஹியத்தீன் அப்துல் காதிர் மரைக்காயர் அங்கும் இலங்கையிலும் மத்ரஸாவின் செயற்பாட்டிற்காக சொத்துக்கள் பல வாங்கி வக்பு செய்தார்கள். அம்மத்ரஸாவில் செய்குனாவிடம் நட்சத்திரக் கணித பாடத்தைக் கற்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் பலர் ஆர்வத்தோடு வந்து கற்றுள்ளனர். மக்காவில் ஷாதுலிய்யா தரீக்காவின் பெரியாராக விளங்கிய ஹலரத் அஷ்ஷெய்கு முஹம்மது இப்ராஹிம் மக்கி (ரஹ்) அவர்கள் அதிராம்பட்டினத்திற்கு வந்து செய்குனாவை கலீபத்துல் குலபாவாக நியமித்தார்கள். அதே காலப் பிரிவிலே செய்குனா அவர்கள் நக்ஷபந்தியா, ரிஃபாயிய்யா ஆகிய தரீக்காக்களின் கலீபாவாகவும் விளங்கினார்கள். ஷாதுலிய்யா கலீபத்துல் குலபாவாக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள்.
இலங்கையிலும் இந்தியாவிலும் ஷாதுலிய்யா தரீக்காவை வளர்ப்பதற்காக பல ஊர்களுக்கும் சென்று தம் கடமையினைச் சிறப்பாக செய்துள்ளார்கள். சீனன் கோட்டை பிட்டவளயில் 1935ஆம் ஆண்டு “அல்மிர் அதுஷ் ஷாதுலிய்யா ஸாவியாவை” நிறுவியதோடு தர்கா நகர் ஸாவிய்யத்துல் இப்ராஹிமிய்யாவிலும் தங்கியிருந்து தரீக்கா நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டியுள்ளார்கள். இவரது காலம் ஷாதுலிய்யா தரீக்காவின் பொற்காலமாகவே விளங்கியது.
அதிராம்பட்டினத்திலும் பிட்டவள ஸாவியாவிலும் புனித புகாரி ஷரீப் பாராயணம் செய்யும் வைபவத்தை துவக்கி வைத்தார்கள். இம் மஜ்லீஸ் இங்கு 92 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மாளிகாஹேன புகாரி தக்கீயாவின் புகாரி மஜ்லிஸிலும் கலந்து சிறப்பித்துள்ளார். சென்னை சட்டமன்ற மார்க்க சீர்திருத்தக் குழுவிலும் ஓர் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்கள். அங்குள்ள மஜ்லிஸ{ல் உலமாவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்கள். இலங்கையிலும் இந்தியாவிலும் புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்களுக்கு கிப்லாவை நிர்ணயிக்கும் பணியும் அன்று இவராலேயே நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹஜ் கடமை குறித்தும் ஹாஜிகளுக்குத் தேவையான அரபு பேச்சு வழக்கு குறித்து தேவையான சொற்றொடர்கள் அடங்கிய அரபுத் தமிழ் ‘கிதாபுல் ஹஜ்’ எனும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்கள். மார்க்க ஞான ஒளி பரப்பிய செய்குனா அவர்களின் அந்திம காலத்தின் பெரும்பகுதி இலங்கையிலே கழிந்துள்ளன. அன்று கொழும்பு உம்மு ஸாவியாவில் நோன்புப் பெருநாள் தொழுகையை செய்குனா அவர்கள் தொழுது, முதல் ஸலாம் கொடுத்தவுடன் மயங்கிக் கீழே சாய்ந்துள்ளார்கள். உடனே மக்கள் அவரைத் தூக்கி வந்து கொழும்பு மாக்கான் மரிக்காரின் இல்லத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சில நாள் சிகிச்சைக்குப் பின்னர் ஓரளவு உடல் தேறியுள்ளார்கள். பின்னர் தன் சொந்த ஊரான அதிராம்பட்டினத்திற்குச் சென்றார்கள். அங்கு கி.பி. 1945 ஜனவரி 29ஆம் திகதி இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள். அன்னாரின் அடக்கஸ்தலம் அதிரை மரைக்கா பள்ளி வளவில் அமைந்துள்ளது

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *