உள்நாடு

முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பு

கல்விச் சபையை ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்ட குழுவில் 08 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு தமிழினத்தைச் சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நமது நாட்டின் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இம்முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் சார்பில் இக்குழுவில் ஒருவரை நியமனம் செய்து சமத்துவத்தை நிலைநாட்டுமாறு கல்வி அமைச்சினால் கல்வி சீர்திருத்தல் தொடர்பான குழுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (05.08.2025) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

கல்வி அமைச்சினால் நியமிக்கப்படும் இக்குழுவில் எங்களது சமூகம் சார்பாக முஸ்லிம் ஒருவரை இந்த அரசாங்கம் ஏன் நியமிக்கவில்லை? என்று மக்கள் எங்களிடம் தங்களின் கவலையை முன்வைக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் ஜனாதிபதிக்கும் உங்களின் ஆளுங்கட்சியினருக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகம் சார்பில் கல்வி அமைச்சில் முஸ்லிம் உயர் அதிகாரிகள் உள்ளனர். அதேபோன்று நமது நாட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் கல்விமான்கள் பணியாற்றுகின்றனர். அவ்வாறே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இக்குழுவில் நியமனம் செய்ய வேண்டும்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது குறைந்த தொகை மாணவர்களுள்ள பாடசாலைகளை மூடிவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அம்பாறை மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களிலும் வறுமையான மக்கள் வாழும் பிரதேசங்களிலும் இயங்கி வரும் குறைந்த தொகையான மாணவர்களுள்ள பாடசாலைகளை மூடும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன் இப்பாடசாலைகளுக்கு அருகில் அமைந்துள்ள நகரப் பாடசாலைகளில் இப்பிரதேச மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் அம்பாறை மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களிலும், வறுமையான மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படும். எனவே, இப்பிரதேச மாணவர்களுக்கு அருகிலுள்ள நகரப் பாடசாலைகளில் தங்களின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான போக்குவரத்து வசதியினையும், ஏனைய வசதிகளையும் கல்வி அமைச்சு நிரந்தரமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலைப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அவர்கள் கல்விச் சபையை ஸ்தாபிப்பதற்கான குழு உறுப்பினர்கள் தான் இப்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும், இக்குழுவில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை நியமிப்பது தொடர்பான விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் மேற்கொள்ளுமாறும், மாணவர்கள் குறைந்த பாடசாலைகளை மூடும் நடவடிக்கையை அப்பிரதேச மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தடைப்படாமல் செயற்திட்டங்களை நாம் எல்லோரினதும் ஒத்துழைப்பையும் பெற்று செயற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *