Tuesday, August 5, 2025
Latest:
உள்நாடு

கல்முனை விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்களுடன் விசேட கலந்துரையாடல் : ஆதம்பாவா எம்.பி சமூகமளிக்கவில்லை..!

கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று சனிக்கிழமை (02) ஒலுவில் கிறீன் வில்லாவில் இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் திகாமடுல்லவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஷாம் காரியப்பர், எம். எஸ்  . உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாஸீத் மற்றும் எம்.ஏ. தாஹிர் ஆகியோர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் கலந்துகொண்டு கல்முனை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதை உறுதிசெய்தனர்.

இக்கலந்துரையாடலில் கல்முனையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், ஜம்யிய்யதுல் உலமா சபையினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு, சமகால பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

தேசிய மட்டத்தில் சமூக பிரச்சினைகள் பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவும், கல்முனை பிராந்தியத்தின் இருப்பு மற்றும் எதிர்கால நலன் குறித்த பரிசீலனைகள் முன் கொண்டு செல்வதற்கும் ஏதுவான ஆரோக்கியமான முயற்சியாக இக்கலந்துரையாடலில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்திற்கு அம்பாறையில் வசிக்கும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஏ. ஆதம்பாபா அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர் இந்த நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தும் முஸ்லிம்களின் முக்கிய பிரச்சனையான இந்த பிரச்சினைக்கு தீர்வை பெரும் கலந்துரையாடலில் இறுதிவரை கலந்துகொள்ள சமூகமளிக்க வில்லை என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்தனர்.

(நூருல் ஹுதா உமர் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *