முஸ்லிம் பெண் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் எம்.பி கோரிக்கை விடுப்பு..!
திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் சுகாதார ஊழியர்களின் மத மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.சுகாதார அமைச்சருக்குக் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பணிபுரிவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இது மத சுதந்திரம் மற்றும் பண்பாட்டு அடையாள உரிமைக்கு எதிரானது எனக் கண்டித்துள்ளார்.
மேலும், இந்த அறிவுறுத்தல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட மத நம்பிக்கையின் உரிமைக்கும், சுதந்திர உரிமைக்கும் எதிராக இருக்கிறது,” எனவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து பணிபுரிந்து வரும் முஸ்லிம் பெண்கள், தங்கள் வேலையை திறமையாகவும், பணிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி ஆற்றி வந்துள்ளனர் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளை, மேலும் ரிஷாட் பதியுதீன் தனது கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்தை நோக்கும் வகையில், முக்கிய அம்சங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார்.
1.இலங்கையின் அரசியலமைப்பின் 10 மற்றும் 14(1)(எ) அம்சங்கள் மத சுதந்திரத்தை உறுதி செய்கின்றன.
2.ஹிஜாப் அணிவது தொழில்நுட்பத்திற்கோ அல்லது சேவைக்கோ பாதிபில்லை.
3.பல்வேறு மதங்களை மதிப்பது, சமூக ஒற்றுமைக்காக அவசியம்.
4.இது புதிய சலுகை அல்ல – நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை தொடர வேண்டும் என்பதே கோரிக்கையாகும்.
அத்துடன், விரைவில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், இது அரசியலமைப்பு பண்புகளை உள்ளடக்கிய, மதிப்புமிக்க சமுதாயத்தின் செய்தியையும் பறைசாற்றும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஊடகப்பிரிவு – ரிஷாட் பதியுதீன் பா.உ)
