நாட்டின் பன்முக அபிவிருத்திக்கு அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் இணைப்பு அவசியம்; இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அக்குறணை கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் சமூக அரசியல் பிரமுகர்களை வரவேற்கும் நிகழ்வும் கடந்த 2025 ஆகஸ்ட் 03ம் திகதி அக்குறணை கிளை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி, வரவேற்பு நிகழ்வில் உரையாற்றுகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசியல் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
புதிய அரசியல் கலாச்சாரத்தின் தேவை
தனது உரையில் நாட்டின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய உஸ்தாத் உஸைர் இஸ்லாஹி அவர்கள்
“இனவாதத்தாலும், விழுமியங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையாலும், சிவில் சமூகத்தினதும் பொதுமக்களினதும் அரசியல் அக்கறையற்ற போக்காலும் எமது நாடு பல்வேறு பின்னடைவுகளை எதிர்நோக்கி இருக்கிறது.
இந்த சூழலில், நாட்டில் ஒரு நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
இந்த வகையிலேயே மனித நலன், இயற்கை வள பாதுகாப்பு மற்றும் நல்லாட்சியை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறது,” என்று குறிப்பிட்டார்.
இந்த உயரிய நோக்கத்திற்காக உழைக்கும் பாராளுமன்ற, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை அழைத்து கௌரவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூகத்திற்குமான பொறுப்புகள்
மக்கள் பிரதிநிதிகளை நோக்கிப் பேசிய அவர், “நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உண்மையான தேவைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் மிகச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். சுயநலப் போக்குகளைப் புறக்கணித்து, சகல தரப்பினருடனும் தொடர்புகளைப் பலப்படுத்தி, உங்கள் அறிவையும் திறமைகளையும் கொண்டு பொதுநலனுக்காகச் செயல்படும்போது எமது நாடும் ஊர்களும் நிச்சயம் வளர்ச்சி அடையும்” என்றார்.
“இந்தப் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரமல்ல. சிவில் சமூக அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் முக்கிய கடமையாக இருக்கிறது. அவர்கள் பிரச்சினைகளையும் தீர்வுக்கான தமது ஆலோசனைகளையும் புள்ளிவிபரங்களுடன், விஞ்ஞானபூர்வமாக மக்கள் பிரதிநிதிகளிடம் முன்வைக்க வேண்டும்.
அவர்கள் முன்னெடுக்கும் நல்ல விடயங்களுக்கு கைகோர்த்து துணை நிற்க வேண்டும். இந்த இணைந்த செயற்பாட்டை ஊக்குவிப்பதற்காகவே நாடு பூராகவும் ஜமாஅத்தே இஸ்லாமி இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது,” எனத் தெரிவித்தார்.
சிறப்பு அதிதிகள் கௌரவிப்பு மற்றும் புதிய சூரா தெரிவு
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரியாஸ் பாரூக், அக்குறணை பிரதேச சபை தலைவர் கௌரவ இஸ்திஹார் இமாமுத்தீன் மற்றும் அக்குறணை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு. இஸ்மாயிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி, அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி – அக்குறணை கிளையின் புதிய ஷூரா உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமையும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.














ஊடக பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி