இலங்கையில் 11,000 சிறு அளவு மீன் வளர்ப்புக் குடும்பங்களை வலுவூட்டும் பிராந்திய ‘AquaLivelihood’ திட்டம் ஆரம்பம்..!
தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய “AquaLivelihood” திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இன்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
“நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தியின் மூலம் சார்க் பிராந்தியத்தில் உள்ள சிறு அளவு மீன் வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புற மக்களின் போசாக்குப் பாதுகாப்பை உறுதிசெய்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக 3.97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள 120,000க்கும் அதிகமான கிராமியக் குடும்பங்கள் இதன் மூலம் நேரடிப் பயனடைவார்கள்.
இத்திட்டத்தின் கீழ், இலங்கையில் சுமார் 11,000 கிராமிய மீன் வளர்ப்புக் குடும்பங்கள் நேரடிப் பயனடையவுள்ளதுடன், இதற்காக 586,224 அமெரிக்க டொலர்கள் (சுமார் 175 மில்லியன் இலங்கை ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் பிரதான தேசிய நிறுவனமாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) செயற்படுகின்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்:
“இன்று நாம் ஆரம்பிப்பது வெறுமனே ஒரு திட்டத்தை அல்ல, ஒரு பயணத்தை. ஆயிரக்கணக்கான சிறிய மீன் வளர்ப்பாளர்களுக்கு உதவும், கிராமப்புறக் குடும்பங்களின் போசாக்கையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும், நமது பிராந்தியத்தில் உறுதியான பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பயணம். இத்திட்டத்தின் பயனாளிகளில் குறைந்தபட்சம் 30% பெண்களாக இருப்பது இதன் மிக அழகான அம்சமாகும். இது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல, அபிவிருத்தியின் ஒவ்வொரு படியிலும் பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும் என்ற செய்தியாகும். பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, சார்க் அபிவிருத்தி நிதியத்தின் மூலம் நாடுகள் ஒன்றிணைந்து, அறிவைப் பகிர்ந்துகொண்டு செயல்பட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்தத் திட்டம் இலங்கைக்கும் முழுமையான தெற்காசியாவிற்கும் ஒரு பெரும் வெற்றியைத் தரும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.”
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள்:
“இந்தத் திட்டத்தின் மூலம், ஆய்வுக்கும் உற்பத்தியாளரின் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இலங்கையில் நிலவும் மீன் குஞ்சுகளின் பற்றாக்குறைக்குத் தீர்வாக, சமூகத்தால் நிர்வகிக்கப்படும் பரவலாக்கப்பட்ட இனப்பெருக்கப் பிரிவுகளை நிறுவுவதும் இதன் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும். பெண்களை உதவியாளர்களாக மட்டுமன்றி, தீர்மானம் எடுப்பவர்களாகவும், உற்பத்தியாளர்களாகவும், தொழில் முயற்சியாளர்களாகவும் வலுவூட்டுவதன் மூலம், நாம் குடும்பங்களையும் சமூகங்களையும் கட்டியெழுப்ப முடியும். இந்தத் திட்டம், அரசாங்கம், ஆய்வாளர்கள், தனியார் துறை மற்றும் விவசாய சமூகத்தை ஒன்றிணைத்த, பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய மாதிரியாகும். இதுவே இத்திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யும்.”
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், கித்சிறி தர்மப்பிரிய அவர்கள்:
“நமது நாடுகளில் நன்னீர் மீன்வளர்ப்பில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான தரமான மீன் குஞ்சுகளின் தட்டுப்பாடு மற்றும் மீன் தீவனத்திற்கான அதிக செலவு ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதே இதன் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலான மீன் தீவனத்தை உற்பத்தி செய்யவும், இலங்கையின் எட்டு மாவட்டங்களில் மீன் குஞ்சுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைக்கு இன்னும் தேவைப்படும் சுமார் 300,000 மெட்ரிக் தொன் மீன் அறுவடையை கடலில் இருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு நன்னீர் மீன்வளர்ப்பை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் 800-900 குடும்பங்கள் நேரடியாக வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். அத்தோடு 30,000க்கும் அதிகமானோருக்கு மறைமுகப் நன்மைகளும் கிடைக்கும்.”