புத்தளம் மாநகர சபை மேயர் மற்றும் புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாகிகள் சந்திப்பு..!
புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாக குழு உறுப்பினர்கள், புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்ஷாத் அஹ்மதை மாநகர சபை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) சந்தித்து எதிர்கால காற்பந்தாட்ட அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
புத்தளம் மாநகர சபையின் பொறுப்பில் இருக்கின்ற புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காற்பந்து போட்டிகளை நடத்தும்போது எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதில் ஏற்படுகின்ற இழுபறிகள், விளையாட்டு வீரர்கள் இடைவேளையில் அமைதியாக இருந்து ஓய்வு எடுக்கின்ற இட அமைப்புகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
மேயர் ரின்ஷாத் அஹ்மத் மாநகர சபை மைதானம் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கூடிய விரைவில் எடுப்பதாக இதன் போது உறுதியளித்தார்.
இதன்போது புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் தலைவர் முஹம்மது யமீனினால் புத்தளம் மாநகர சபையின் மேயருக்கு புத்தளம் காற்பந்தாட்ட லீக் சார்பாக நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)