உலகம்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய உயர் நீதிமன்றம் கண்டனம்..!

சீன எல்லை விவகாரம் தொடர்பான வழக்கில், நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய – சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கடந்த 2022ல் இந்திய ராணுவம் பற்றி ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக லக்னெள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றமும் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்யவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவின் விசாரணை திங்கள்கிழமை காலை நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாசி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாட்டின் பிரச்னையை அவர் பேசியுள்ளார் என ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் அங்கு இருந்தீர்களா? அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி இதனைக் கூறுகிறீர்கள்? உண்மையில் இந்தியராக இருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்” என்று கூறினர்.

“நம் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயம் என்று ஒரு உண்மையான இந்தியன் கூறலாம்” என்று சிங்வி கூறினார்.

மோதல் ஏற்படும்போது இரு தரப்பிலும் பாதிப்புகள் வருவது வழக்கத்திற்கு மாறானது இல்லைதானே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தகவல்களை மறைப்பதைத் தடுக்கவே ராகுல் காந்தி அவ்வாறு பேசினார் என்றும் அது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை என்றும் அவரை கேள்வி கேட்க அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்வி பதிலளித்தார்.

இறுதியில் சிங்வியின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தியின் சிறப்பு விடுப்பு மனு(Special Leave Petition) மீது பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் 3 வார காலத்திற்கு ராகுல் காந்தி மீது கீழமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *