உள்நாடு

இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் அதே வேளையில் நவீனமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் கல்விச் சீர்திருத்தமொன்றை கொண்டு வர வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கல்வியின் மூலம் பூரணத்துவமான குடிமகன் உருவாகின்றனர். இந்த பூரணத்துவமான குடிமகனை உருவாக்க வேண்டுமென்றால், கல்வி முறை சர்வதேச தொழிலாளர் சந்தையின் கேள்வி மற்றும் தேவையுடன் நேரடி தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களுக்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்குவது சாத்தியமாக அமைந்து காணப்பட வேண்டும். மானியங்களை நம்பியிருக்காத உயர்ந்த குடிமகனை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஒரு சில துறைகளில் கற்போர் சொந்தக் காலில் நிற்கக்கூடிய குடிமக்களாக உருவாக்கப்படுகின்றனர். ஆனால் ஏனைய துறைகளை எடுத்துக் கொண்டால் அவ்வாறு இல்லை. கல்வியில் போட்டித் தன்மையை உருவாக்கும் போது, இலவசக் கல்வியும் பாதுகாக்கப்பட வேண்டும். இலவசக் கல்வியால் ஏற்படும் வேலையின்மை வரிசையையும் நாம் இல்லாதொழிக்க வேண்டும். இந்த சமூக அநீதி ஒழிக்கப்பட வேண்டுமானால் இலவசக் கல்வி மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். வளங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட வேண்டும். அரச முதலீடு மற்றும் பிற வளங்களைக் கொண்டு இலவசக் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Citizen Voice வேலைத்திட்டத்தின் கீழ் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு தரப்பினரோடு கலந்துரையாடிய சந்தர்ப்பத்திலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இன்று, சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் அதே வேளையில், மாற்றுக் கல்விக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி நடுத்தரப் பாதையையே பின்பற்றுகிறது. இலவசக் கல்வியை மேம்படுத்தி, மாணவர் தலைமுறைக்கு மாற்று வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கொத்தலாவல போன்ற தனியார் பல்கலைக்கழகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். கல்வி என்பது மனித உரிமையாகும் என்பதால், இந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். நடைமுறையில், அன்றாட வாழ்க்கையில் எல்லாம் மனப்பாடமாக தற்போதைய கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுத்து வரப்படுவதால், இது மாற வேண்டும். எனவே, இந்த முறைமையை மாற்ற வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவர்கள் உருவாக்கப்பட வேண்டும். எல்லாமே பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டமையக் கூடாது. பரீட்சை முறையை முற்றிலுமாக நீக்காமல் கலப்பு முறையை பிரயோகிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அழகியல் மற்றும் கலை போன்ற விடயங்களும் அவசியமாகும். இலவசக் கல்வி குறித்த கலந்துரையாடல் அவசியமில்லை. இலவசக் கல்வி கட்டாயமாக காணப்பட வேண்டும். வேலையின்மையை அதிகரிக்கச் செய்யும், பழைய, காலாவதியான கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். எனவே நவீன வகையில் அமையும் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில், கல்வியின் மனித வளங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *