நுவரெலியாவில் கன மழை;விவசாய விளைநிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கடிப்பு..!
நுவரெலியா நகர எல்லையிலும், ஹவா எலியா, ராகல, மீபிலமான பட்டிபொல, சாந்திபுர மற்றும் மகஸ்தோட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று (02) மாலை முதல் இன்று (03) வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல மரக்கறி விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்தில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மீபிலமான பட்டிபொல பிரதான வீதியும், நுவரெலியா-ராகல பிரதான வீதியும் தற்சமயம் நீரில் மூழ்கியுள்ளன.
கனமழை காரணமாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் முறையான வடிகால் வசதியை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
(ரஷீத் எம். றியாழ்)