உள்நாடு

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது
பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிப்பு.

“பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது” என்ற உறுதியான உத்தரவாதத்தை தாம் ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து எழுத்து மூலமாக பெற்றுள்ளேன்.
என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஒலுவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்முனை பள்ளிவாசல் மற்றும் கல்விசார் குழுவுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறினார், “இந்த விடயத்தை அரசியலாக்கவோ, இன உணர்வுகளை தூண்டி அரசியல் பலன் பெறவோ நான் விரும்பவில்லை. அதனாலேயே நான் இதுபற்றி எந்தவொரு விளம்பரத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்–முஸ்லிம் உறவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் நான் செயற்படுகிறேன்.”

இது தொடர்பான அவரது கருத்துகளில் முக்கியத்துவம் பெற்றது:

“முஸ்லிம் பெரும்பான்மையுள்ள பிரதேசங்களில் தமிழர்களுக்கும், தமிழ் பெரும்பான்மையுள்ள பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கும் எந்த அநீதியும் நிகழக்கூடாது என்பதே எனது நிலைபாடு. காணி, நிதி ஒதுக்கீட்டுகள் மற்றும் நிர்வாக தீர்மானங்களில் ஏதேனும் சரிபார்க்கக்கூடிய முறைப்பாடுகள் இருந்தால், அதனை மாவட்ட மட்டத்தில் இரு சமூக பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்யும் குழு அமைப்பது ஒரு கட்டமைக்கப்பட்ட வழியாக இருக்கலாம்.”

அவரது கூற்றுப்படி, கிராம சேவை பிரிவுகள் போன்ற நிர்வாக மாற்றங்களில் முன்பே சில அநீதிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது போன்ற பிரச்சனைகள் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இன அடிப்படையில் அரசியல் செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், இது தமிழ்–முஸ்லிம் உறவுகளை பலவீனமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

“கடந்த அரசாங்கங்களில் இஸ்ரேல் மோசாட் போன்ற வெளிநாட்டு உளவுத்துறைகள் அரசாங்கங்களுக்கு வழங்கிய ஆலோசனைகளின் பின்னணியில் இன மோதல்களும் அதனை அடுத்து நடந்த கொடூர கொலைகளிலும் ஏற்படுத்தப்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்க முடியாது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.உதுமான் லெப்பை, தாஹிர் மற்றும் அப்துல் வாசித் பங்கு பற்றினார்கள்.

(கே எ ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *