மத்திய அரசு அனுமதிக்குப் பின் இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவை ஆரம்பம்..! -தமிழ்நாடு மாநில அமைச்சர் வேலு
மத்திய அரசின் அனுமதிக்கு பின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.118 கோடியில் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக அலுவலகம் அருகே துறைமுக கடல்சார் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழைய துறைமுக அலுவலகம் இடிக்கப்பட்டு ரூ.4 கோடியே 19 லட்சத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் இந்த புதிய துறைமுக அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கமே ராமேஸ்வரம்- இலங்கையின் தலைமன்னார் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்குத் தான்.
ரூ.118 கோடியில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்கு பின்னர் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)