திப்பட்டுவாகம நீர்த்தேக்கத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் கால்வாய் பணிகள் வடமத்திய ஆளுனரால் ஆரம்பித்து வைப்பு
அனுராதபுரம் வுளங்குளம் , பஹலகம மற்றும் தலாவ கால்வாய் ஊடாக திப்பட்டுவாகம நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்வதற்கான புதிய கால்வாய் பணிகளை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வின் தலைமையில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேனா ரத்நாயக்க ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மோதரகம் ஆறு என்று அழைக்கப்படும் இந்த தலாவ கால்வாய் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வயல் காணிகளுக்கு நீரை வழங்க முடியும்.
இதன் இரண்டாவது கால் வாய் ஊடாக திப்பன்னே பஹலகம , வுளங்குளம் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நீண்ட கால்வாய் ஊடாக திப்பட்டுவாகம நீர்த்தேக்கம் வரை நீரைக் கொண்டு செல்வதே இதன் முதற் கட்டமாகும். இரண்டாவது கட்டத்தின் ஊடாக வுளங்குளத்தில் இருந்து பஹல திப்பட்டுவாகம வரை புதிதாக நிர்மாணிக்கப்படும் கால்வாய் ஊடாக நீரை கொண்டு செல்ல முடியும். இந்த மூன்று குளங்களுக்கும் நீரை கொண்டு செல்லும் போது தற்போது பயிரிடப்படும் நெல் வயல்களுக்கு கூடுதலாக சுமார் ஆயிரம் ஏக்கர் புதிய நெல் வயல்களை பயிரிட இப்பகுதி விவசாயிகளுக்கு வாய்ப்புண்டு.
இந்த மூன்று நீர்தேக்கங்களுக்கும் புதிதாக நீர் வழங்கும் போது நெல் விவசாயிகள் கூடுதலாக மேட்டு நில விவசாயத்தையும் மேற்கொள்ள முடியும். மேலும் நன்னீர் மீன்பிடித்துறை தொழிலை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். மேலும் இந்த நீர்த்தேக்கங்களில் தாமரை , ஓலிபண்டர் மற்றும் நீர் அல்லி போன்ற மலர் சாகுபடியைத் தொடங்கி அதன் மூலம் விவசாயிகள் கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
இதற்காக வடமத்திய மாகாண சபை நிதியிலிருந்து 400 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)