உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செயலமர்வு
உடற்பயிற்சி வாரத்தினை முன்னிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பாடசாலை அதிபர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று செவ்வாய்க்கிழமை (29) சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உடற்கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.முஸ்தாக் அலி அவர்களின் ஒருங்கிணைப்பில் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ,எம்.எஸ்.இர்ஷாட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.
உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்கை குறித்து பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ,எம்.எஸ்.இர்ஷாட் இதன்போது விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து அம்பாரை மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ் அஹமட், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிஸாட் ஆகியோர் உடற்பயிற்சியின் படிமுறைகள் மற்றும் ஒழுங்கின் அடிப்படையில் செயல்முறை பயிற்சிகளையும் வழங்கினர்.
உடற்பயிற்சி வாரத்தில், இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துவதனூடாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணரவும் ஊக்குவிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.


