உள்நாடு

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ Prof.ஜெயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் நெறிப்படுத்தலில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹதுன்னெத்தி அவர்களின் தலைமையில் (31.07.2025) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் ஹமீது வாசித், கே.கோடிஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பெருந்தோட்டக் கம்பனி – ஹிகுரான சீனி கல்லோய தொழிற்சாலை மற்றும் கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அண்மையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் அவர்களின் நெறிப்படுத்தலில், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். வாசித், மஞ்சுல ரத்நாயக்க ஆகியோரும் பங்குபற்றுதலுடன் கரும்பு உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகள் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடனும் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அன்று உறுதியளித்ததன் பிரகாரம் இக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர் அமைச்சரினால் கரும்பு காணி உரிமங்கள் தற்போது யாருக்கு எவ்வளவு அளவு சொந்தமானது என்பதை மாவட்ட செயலாளர் தலைமையில் குழு அமைத்து அனைத்து தரப்பினர்களிடமும் கேட்டறிந்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் விவசாயிகளுக்கான உரிமங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்புத் தரப்பினர் கரும்புக் காணி பயிர் சம்மந்தமான புகார்கள் தொடர்பாக மேலதிக கவனம் செலுத்தி நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

(கே. எ. ஹமீட் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *