ரஷ்யா,சீனா, ஜப்பான், அமெரிக்க நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் பசுபிக் கடற்கரையின் ஹொக்கைடோ முதல் வகயாமா வரையான கடற்கரை பகுதிகளுக்கு 3 மீற்றர் உயரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் பசுபிக் கடலோரப் பகுதிகளின் சில பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவாட் மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் 1.3 மீற்றர் அளவிலும், அதே நேரத்தில் மியாகி மாகாணத்தில் உள்ள இஷினோமகி துறைமுகத்தில் 50 சென்றி மீற்றர் அளவிலும் யோகோஹாமா துறைமுகத்தில் 30 சென்றி மீற்றர் அளவிலும் டோஹோகு மற்றும் கான்டோ பகுதிகளிலும் உயரமான அலைகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுனாமி தொடர்ந்து வருவதால், கடலோரப் பகுதிகள், ஆறுகள் மற்றும் பிற இடங்களில் உள்ள மக்கள் உயரமான நிலங்கள், வெளியேற்றும் கட்டடங்கள் மற்றும் பிற பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அலைகளின் போது சுனாமி ஏற்பட்டால் தற்போது இருப்பதை விட அலைகளின் அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு அனைத்து எச்சரிக்கைகளும் நீக்கப்படும் வரை மக்கள் வெளியேறாமல் இருக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிழக்கு ஹொக்கைடோவில் உள்ள நெமுரோவில் உள்ள ஹனசாகி துறைமுகத்தை காலை 10:30 மணிக்கும், ஹமனகா நகரத்தை காலை 10:36 மணிக்கும், குஷிரோ துறைமுகத்தை காலை 10:42 மணிக்கும் 30 சென்றிமீற்றர் அளவில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.