உள்நாடு

ஒலுவில், தீகவாபி பிரதேசங்களுக்கான பொது விளையாட்டு மைதானங்களுக்குரிய காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கூட்டம்..!

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (28.07.2025) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் காணி சீர்திருத்தல் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் திருமதி. எப்.நஹீஜா முஸக்கீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான்,அட்டளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்கள், அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.சத்தார், ஒலுவில் பிரதேச முக்கியஸ்தர்களும், திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

சென்ற 11/02/2025 ஆம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் ஒலுவில் பிரதேச மக்களுக்கான விளையாட்டு மைதானத்திற்கான ஒலுவில் LRC காணியிலிருந்து இடத்தை வழங்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் காணி சீர்திருத்தல் ஆணைக்குழுவிற்கான காணியினை நில அளவை செய்வதற்கு 2019 ல் 85,000/- ரூபா செலுத்தப்பட்டும் இதுவரை ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணி விடுவிக்கப்படாமல் உள்ளது. எனத் தெரிவித்ததுடன், தீகவாபி பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்திற்கான காணியினை வன இலாகாத் திணைக்களத்தினால் விடுவிப்புச் செய்யப்படாமல் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரேரணை முன்வைத்தார். அதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் இதற்காக திணைக்களத் தலைவர்களுடன் குழுவொன்றை நியமித்து இது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

  1. தீகவாபி பிரதேச விளையாட்டு மைதானத்திற்கான 2 ஏக்கர் காணியை வன இலாகா திணைக்களத்தினால் விடுவிப்பதற்கான அனுமதியினை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டிருப்பதால் தீகவாபி விளையாட்டு மைதானத்திற்கான 2 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் மேற்கொள்ளல்.
  2. ⁠ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான 6 ஏக்கர் காணியினை ஒலுவில் LRC காணியிலிருந்து அடையாளப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

கள விஜயத்தினை மேற்கொண்டு ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான 6 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 2 வாரங்களுக்குள் நில அளவை பணியினை மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டம் முடிந்த பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இணைந்து உரிய இடத்தை பார்வையிட்டனர்

(கே எ ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *