உலகம்

அபூபக்கர் முஸ்லியாரின் முயற்சியில் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து..!

யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், யேமனில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் வேண்டுகோளின் பேரில், ஷேக் ஹபீப் உமர் பின் ஹஃபீத் நியமித்த யேமன் அறிஞர்கள் குழு, வடக்கு யேமனின் ஆட்சியாளர்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்து கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளின் போது இந்த முடிவு எட்டப்பட்டது.

உயிரிழந்த தலாலின் குடும்பத்தினருடன் மேலும் கலந்துரையாடிய பின்னர் மற்ற விடயங்கள் முடிவு செய்யப்படும் என்றும் காந்தபுரத்தின் அலுவலகம் அறிவித்தது.

முன்னதாக, காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டை அடுத்து, கடந்த ஜூலை 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது.

கேரளா பாலக்காடு, கொல்லங்கோடு, தெக்கிஞ்சிராவைச் சேர்ந்த நிமிஷா பிரியா, தற்போது யேமன் தலைநகர் சனாவில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நிமிஷா பிரியா யேமனில் பணிபுரிந்து போது 2017ஆம் ஆண்டு கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

நிமிஷா பிரியாவும் அவரது நண்பரும் ஜூலை 2017 இல் யேமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்து அவரது உடலை தங்கள் வீட்டிற்கு மேலே உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்ததாக கூறுகிறது.

நிமிஷா பிரியா அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, 2018இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. யேமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி முன்னதாக மரணதண்டனை நிறைவேற்ற அனுமதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *