உள்நாடு

தேர்தல் காலத்தில் காட்டிய அன்பை இப்போதும் காட்டுங்கள்..! -சஜித் பிரேமதாச

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பக்க பலத்தை வங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை நாங்கள் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். கடந்த காலத்தில் பராட்டே சட்டத்தின் அமுலாக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவர்களது அக்கால கடன் மறுசீரமைப்புகள் இடம்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோவிட் மற்றும் வங்குரோத்துநிலை ஆகிய மூன்று துயரங்களால் ஆதரவற்ற நிலையில் இருந்த இத்தரப்பினருக்கு அரசின் தலையீடு மூலம் நிவாரணம் கிடைக்கவில்லை. குறித்த தொழில்முனைவோர் சார்பாக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், இவர்களின் விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Citizens’ Voice வேலைத்திட்டத்தின் கீழ் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(27) நடைபெற்ற கலந்துரையாடலின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 50% க்கும் அதிகமாக பங்களித்து, இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் இந்த நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மீது தேர்தல் காலத்தில் காட்டிய அதீத அன்பை செயல்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும். பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அப்போதுதான் 2028 இல் வெளிநாட்டுக் கடனை எம்மால் திருப்பிச் செலுத்தலாம். பேணிச் செல்ல வேண்டிய பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்வதும் தற்போது சாத்தியமற்ற ஒன்றாக காணப்படுகின்றது. 2028 ஆம் ஆண்டில் நாடு தனது கடன்களை செலுத்த முடியாவிட்டால், மீண்டும் ஒருமுறை வங்குரோத்து நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மீது அரசாங்கம் கவனம் செலுத்தி, தற்காலிக, நிலையற்ற தீர்வுகளுக்குப் பதிலாக நிலையான தீர்வை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். எனவே, இந்தத் துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளைக் கைவிடாமல், இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்கிக் கட்டமைப்பில் அவர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. நாட்டில் தொழில்முனைவோரின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் தீர்வுகள், வங்கிகளின் செயல்பாடுகள், கடன் வட்டி, வட்டிச் சலுகைகள், தள்ளுபடிகள் குறித்து எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். முறையற்ற வகையில் பெரும் வட்டி மற்றும் கடன் சுமைகளை இவ்வாறு அறவிடுவதற்கு இடமளிக்க முடியாது. இந்த அநீதிக்கு எதிராகவும் குரல் எழுப்புவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *