உள்நாடு

கம்பஹா மாவட்டத்தின் முதலாவது “ஆதரவு சிகிச்சை மையம் (Palliative care clinic)” வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் திறந்து வைப்பு..!

“நாம் கதைப்போம் – நோயுற்ற மனங்களை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் “ஆதரவு சிகிச்சை மையம் (Palliative care clinic)” நேற்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டது. கம்பஹா மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முதலாவது ஆதரவு சிகிச்சை மையம் இதுவாகும்.

உயிருக்கு ஆபத்தான நோய் நிலையுடன் அவதியுற்று வாழும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் மற்றும் ஏனைய உளவியல், சமூக மற்றும்ஆன்மீக பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை சரியான முறையில் அணுகுவதன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த “ஆதரவு சிகிச்சை மையம்” உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்பிரிவு வைத்திய அதிகாரி சூலா பண்டாரவின்‌ அழைப்பில் அத்தனகல்ல ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த மகாநாயக்க தேரரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர, உதவி பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் சீ.மூரகே, விஷேட புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜனக குரே உட்பட வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள், அத்தனகல்ல பிரதேச செயலாளர், அத்தனகல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகர், நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கவ்ஸுல் பிர்தவ்ஸ், கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம கதீப் மௌலவி பர்ஸான் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார் உட்பட சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(ரிஹ்மி ஹக்கீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *