அனுராதபுரத்தின் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் கைவரிசை..!
அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேர் கொண்ட இனந்தெரியாத குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கொள்ளைச் சம்பவம் (28) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் பண்டுளகம பகுதியில் அமைந்துள்ள உபுள் என்டபிறைஸஸ் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள தீப்தி எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே குறித்த கொள்கைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்ற முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கொள்ளையர்கள் உபுள் என்டபிறைஸஸ் எரிபொருள் நிலையத்தில் 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தையும் தீப்தி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யார் என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)