ஒன்றாக ஓடி ஒன்றாக எழுவோம் எனும் தொனிப்பொருளில் அறுகம்பேயில் அரை மரதன் ஓட்டப்போட்டி; 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பு..!
அறுகம்பே பிரதேசத்துக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.
குறித்த போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வும் ஊடகவியாளர் சந்திப்பும் அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் சனிக்கிழமை (26) அறுகம்பே றாம்ஸ் கபே உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அறுகம்பே பிரதேசம் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன ஒரு சிறந்த இடமாகும். தற்போது இங்கு உள்நாட்டு மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக நீர்ச்சறுக்கல் விளையாட்டிலும், அறுகம்பே பிரதேசத்தின் இயற்கை வளங்களைக் கண்டுகழிக்கவும் வருகைதரும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இம்முறையும் அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
”ஒன்றாக ஓடி ஒன்றாக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள சர்வதேச தரத்திலான இந்த மரதன் ஓட்டப் போட்டியானது குறித்த மரதன் போட்டியானது 21.1 கிலோமீற்றர், 10கிலோமீற்றர், 5கிலோமீற்றர் என 3பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. இதில் உள்நாட்டு வெளிநாட்டு மரதன் ஓட்ட வீரர்கள் என சுமார் 300பேர் பங்குபற்றவுள்ளனர்.
விசேடமாக மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டங்களில் பிரசித்தி பெற்ற தென் ஆபிரிக்கா, கென்யா போன்ற நாடுகளில் இருந்தும் பல வீரர்கள் முன்கூட்டியே தங்களது பதிவுகளை செய்துள்ளனர். அந்தவகையில் இதுவரை 14 நாடுகளிலிருந்து 60 வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டினைச் சேர்ந்த 120 வீரர்களும் ஒன்லைன் ஊடாக பதிவுகளை செய்துள்ளனர். மேலும் இம்மரதன் போட்டியில் பங்கேற்குமாறு உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், பதக்கம் மற்றும் சான்றுதழ்களும் வழங்கப்படவுள்ளது. உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் போட்டிகளில் அறுகம்பே அரை மரதனும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் அறுகம்பே அபிவிருத்தி போரம் 7வது தடவையாக இப்போட்டியினை நடாத்துகின்றது என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஅஹமட் நசீல், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.மாபிர், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மலிக் உட்பட பாதுகாப்புத்துறையினர், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
(றியாஸ் ஆதம், ஏ.எல்.எம்.சினாஸ், எம்.எம்.ஜபீர்)





