உலகம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி..!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக விஞ்ஞானி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் தனது ஜனாதிபதி பதவி காலத்திற்கு பின்னர், இந்தியா முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் கடந்த 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மறைந்து முன்னாள் ஜனாதிபதி விஞ்ஞானி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை இந்நியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கலாமின் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதில் ராமேசுவரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது நாசர், பாஜகவின் தேசிய சிறுபான்மையினர் பிரிவுசெயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் நாராயணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வட்டாட்சியர் அப்துல் ஜபார், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொது மக்கள், மாணவ, மாணவிகள், ராமேசுவரம் வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *