உலகம்

இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக நிரந்தர தீர்வைக் காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடி கவனத்தை செலுத்தும்படி முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்..!

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவிற்கு 26.7.2025 சனிக்கிழமை காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருந்தார்.
மேற்படி கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவர்கள். 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் உள்ளனர். இந்த அளவிலான மற்றும் முக்கியத்துவமிக்க திட்டத்திற்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, இலட்சக்கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலத்தை பாதித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியப் பிரதமர் அவர்களிடம், 2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூபாய் 2,151.59 கோடி ஒன்றிய அரசின் பங்கை உடனடியாக விடுவிக்கவும். 2025-26ஆம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியினை விடுவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கான இரயில்வே திட்டங்கள்; பத்தாண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள பல முக்கியமான இரயில் பாதை திட்டங்களான திண்டிவனம்- செஞ்சி திருவண்ணாமலை (70 கி.மீ) இரயில் பாதை, ஈரோடு-பழனி (91 கி.மீ) இரயில் பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி (60 கி.மீ) இரயில் பாதை, அத்திப்பட்டு புத்தூர் (88 கி.மீ.) இரயில் பாதை, மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் (180 கி.மீ) இரயில் பாதை ஆகிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கேட்டும்; 87 கிமீ நீள திருவனந்தபுரம் கன்னியாகுமரி இரட்டை பாதை பணியினை துரிதப்படுத்திடவும், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் அளித்திடவும். கோயம்புத்தூர்-பல்லடம்-கரூர், கோயம்புத்தூர்- கோபிசெட்டிபாளையம்- பவானி-சேலம், மதுரை- மேலூர்-துவரங்குறிச்சி- விராலிமலை- இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்டங்களுக்கு வழித்தட ஆய்வு / விரிவான திட்ட அறிக்கைஒப்புதல் கோரியும்.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தரத் தீர்வு காணுதல் சமீப காலமாக, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர்ச்சியான கைதுகள் மாநிலத்தில் உள்ள ஏழை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்து வருகிறது.

இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை கடிதங்களை எழுதியுள்ளார்.தூதரக நடவடிக்கைகள் மூலம் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண இந்தியப் பிரதமர் இதில் தனது நேரடி கவனத்தை செலுத்தும்படி முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *