சவூதி அரசாங்கத்தின் ‘சவூதி நூர்’ தன்னார்வத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்..!
இலங்கை மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு துறைகளில் மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் சவூதி அரேபியா, இம்முறை ‘சவூதி நூர்’ தன்னார்வத் திட்டத்தின் மூலம் கண் பார்வை தொடர்பான நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாம் செப்டம்பர் 15 முதல் 28 வரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. இதில் கண்புரை உள்ளிட்ட பல்வேறு கண்
நோய்களுக்கான பரிசோதனைகள், சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய தேவையான மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கள் பார்வையை மீண்டும் பெறுவதோடு, வாழ்க்கைத் தரத்திலும் நேர்மறையான மாற்றத்தை
அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார சிக்கல்கள் காரணமாக சிகிச்சையைப் பெற முடியாமல் இருந்த பலர் இம்முகாமின் வாயிலாக புதிய நம்பிக்கையைப் பெறுகின்றனர்.
இலங்கையில் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் சவூதி அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் இரு நாடுகளுக்கிடையேயான
நட்புறவை மேலும் வலுப்படுத்துகின்றன. இலங்கை மக்களின் சார்பாக, இதற்காக எங்கள் நன்றியை இதயம் கனிந்தும் மனமார்ந்தும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
(எஸ். சினீஸ் கான்)