உள்நாடு

கல்முனை பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்து தீர்வுகளைக்காணும் செயற்பாடுகளை பொது நிர்வாக, மாகாண சபைகள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும்..! -கே எ ஹமீட்

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை.

கல்முனை பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டும் இப்பிரச்சினைக்கு இதுவரையும் தீர்வு கிடைக்கவில்லை .

கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் கலந்துரையாடி நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று 24.07.2025 ல் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முஸ்லிம் , தமிழ் சமூகங்களுக்கிடையில் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் அண்மைக்காலமாக கருத்து தெரிவித்து வருவது குறித்து கவலையடைகின்றோம்.

கல்முனை பிரச்சினையை தங்களின் அரசியல் நலனுக்காக பாவிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
கல்முனை பிரதேசத்திற்கு சுமூகமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்குள்ளது . எனவே இதற்கான ஏற்பாடுகளை அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

கல்முனை உப பிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம் சமூகத்தின் 70% காணிகள் அமைந்திருப்பதால் முஸ்லிம், தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளும், தலைவர்களும் சிநேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வுகளை காண நாம் முயற்சிக்க வேண்டும்.

கல்முனை,பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, மருதமுனை பிரதேச முஸ்லிம் , தமிழ் மக்கள் புரிந்துணர்வுடன் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். கல்முனை பிரச்சினையை இரண்டு சமூகத்துடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வு பெற வேண்டும்.

இரண்டு சமூகத்துடன் பேசி இரண்டு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வுகளை கண்டு முஸ்லிம் , தமிழ் மக்கள் நிரந்தரமாக, நிம்மதியாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்…

கல்முனை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் விசேட கூட்டம் ஒன்றை கூட்டி முஸ்லிம் , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது எனத்தெரிவித்தார். நாம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன …

எதிர்வரும் 06.08.2025 பி.ப.02.00 மணிக்கு கல்முனை பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட கூட்டத்தை நடாத்துவதாகவும்,அவ்விசேட கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் திரு.ஆலோக பண்டாரவை பணித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை….

நமது நாட்டின் முக்கியமான அமைச்சான பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர், பிரதியமைச்சர், செயலாளர், அமைச்சின் உயர் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். உங்களின் நற்பணிகள் குறித்து இந்த வருட வரவு செலவு திட்ட விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது மக்கள் சார்பில் நான் நன்றி தெரிவித்திருந்தேன். கடந்த காலங்களில் இனவாத செயற்பாடுகளால் நமது நாட்டில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வும், ஐக்கியமும் இல்லாமலிருந்தது.
தற்போதைய நிலையில் நமது நாட்டில் படிப்படியாக இன உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.இக்கால கட்டத்தில் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் செயற்பாடுகளை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார் .

நமது நாட்டில் பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் காணிகளை வாங்கி சட்ட விரோதமாக கட்டிடங்களை நிர்மாணித்து சபாத் இல்லம் என்ற பெயரில் இயங்கி வருகின்றனர் .இச்செயற்பாடுகளால் அமைதியாக மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் பல பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலின் சட்ட விரோத கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து அம்பாறை மாவட்ட மக்கள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள 20 பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் இல்லாத நிலைமை உள்ளதுடன் சில பிரதேச சபைகளில் தவிசாளர்களின் வாகனங்களை திருத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது எனவே கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் வாகனங்களுக்கான ஏற்பாடுகளை பொது நிர்வாக ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய நீலாவணை முஸ்லிம் கிராமசேவகர் பிரிவு சென்ற 20.02.2001ம் திகதி 1172/8 இலக்கமுடைய அரச வர்த்தமானி ஊடாக பொது நிர்வாக அமைச்சில் அதி விசேட வர்த்தமானி மூலம் KP – 71/A எனும் கிராம சேவகர் பிரிவாக பிரகடனப்படுத்தப்பட்டு 24 வருடங்களுக்கு சென்ற பின்பும் மேற் குறித்த வர்த்தமானியானது அமுல்படுத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.எனவே இது தொடர்பான செயற்பாடுகளை பொது நிர்வாக அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம் . எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார் .

பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளர்களை நியமனம் செய்யும் போது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் சார்பில் பிரதேச செயலாளரும், சிறுபான்மையாக வாழும் மக்கள் சார்பில் உப பிரதேச செயலாளரும் நியமிக்கப்பட வேண்டும். அப்போது தான் இனங்களுக்கிடையில் பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒற்றுமை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த பொது நிர்வாக மாகாண சபைகள் பிரதியமைச்சர் ருவான் செனரத்…..

எதிர்காலத்தில் பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாகவும் ,2001ம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி கல்முனை, பெரிய நீலாவணை முஸ்லிம் கிராம சேவகர் பிரிவு தொடர்பாகவும் கிழக்கு மாகாண பிரதேச சபைகளுக்கான வாகனங்கள் தொடர்பான விடயங்களில் பொது நிர்வாக, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.

(கே எ ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *