இளைஞர் யுவதிகளை அழிவிலிருந்து மீட்காவிடின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருக்கும் அஷ்ஷெய்க் ஸகி அஹமத்(அஷ்ரபி,யெமனி)
“நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலம் மிகவும் சோதனைகள் நிறைந்தது. நல்லதும் கெட்டதும் இரண்டறக் கலந்து விட்டன. எதனைப் பின்பற்றுவது? எதனை விட்டு விடுவது என்ற குழப்ப நிலை. இளைஞர், யுவதிகள் தொலைபேசி வழிகேட்டில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தொல்லையில் இருந்து அவர்களை அவசியமாகவும் அவசரமாகவும் மீட்டெடுக்க வேண்டும். தவறிவிடுவோமயா னால் மிகவும் பயங்கரமான இருள் சூழ்ந்த எதிர்காலம் ஒன்றை சந்திக்க வேண்டி வரும். “
என்று பேருவளை கெச்சிமலை தர்கா பள்ளியின் சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ் அல்ஹாஜ் ஸகி அஹ்மத் (அஷ்ரபி யெமனி) பின் அஷ்ஷெய்ஹ் காலிப் அலவியத்துல் காதிரி
அவர்கள் கூறினார்.
பேருவளை, சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் மற்றோர் இளைஞர் பிரிவான அஷ்ஷாதுலியத்துல் பாஸிய்யா இளைஞர் சங்கம் பேருவளை தொகுதி இஸ்லாமிய இளம் இளைஞர்களுக்கான முழு நாள் ஆத்மீக சூபித்துவ பயிற்சிப் பாசறை ஒன்றை சீனன்கோட்டை அல்பாஸியா பெரிய ஜும்ஆப் பள்ளியில் ஒழுங்கு செய்திருந்தது.
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் இஸ்ஸானுத்தீன் (நளீமி)
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஸகி அஹ்மத் வளவாளராக கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாத் உறுப்பினர் அல்ஹாஜ் அஹ்லஸ் தாஜுதீனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
முஹம்மத் அன்பாஸ் அரூஸீனுடைய
கிராஅத்துடன் கலீபத்துஷ் ஷாதூலி மௌலவி எம். ஐ. எம் ரபீக்கின் துஆ பிரார்த்தனையுடனும் ஆரம்பமான இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஸகி அஹ்மத் தொடர்ந்து கூறியதாவது,
தொலைபேசியின் கூட்டு சாத்தான்களான சமூக வலைப்பின்னல், முகநூல் என்றெல்லாம் உறங்காது அதிகாலை 3-4 மணிவரையும் உலா வந்து பகல் முழுவதும் உறக்கத்தில் கழிப்பார்கள். இதனால் தொழுகை உள்ளிட்ட ஆத்மீக செயல்பாடுகள் இவர்களை விட்டும் படிப்படியாக விடை பெற்று சென்று விடுகின்றன. சரியான வழிகாட்டல் இன்றி தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். நல்ல பழக்கவழக்கங்கள் விடுபட்டு தீய சகவாசமும் கெட்ட செயற்பாடுகளுமே இவர்களிடம் குடிகொள்கின்றன. இதனால் நல்லொழுக்கம் நற்பண்புகள் யாவும் அறவே அற்றுப்போய் தாய் தகப்பனை கூட அவமதிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அழிவின் விளிம்புக்கே சென்று விடுகிறார்கள். புதுப்புது கொள்கைகள் கோட்பாடுகளின் தோற்றத்தால் மார்க்கத்திலும் பல பிளவுகள், பல பிரிவுகள், யார் சொல்வது சரி என்ற தடுமாற்றம்.
இந்நிலையில் தம் பிள்ளைகளை சரியான திசையில் பயணிக்க பெற்றோர்கள் தான் முன் வரவேண்டும். குழந்தை மழலைப் பருவத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு ஆத்மீக பயிற்சியும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும். தாயும் தந்தையினை குழந்தைகளின் ஆரம்ப ஆசான்களாவார்கள்.
அவர்கள் குடியிருக்கும் வீடுகளே அவர்களது ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் ஆகும். ரஸூல் (ஸல்) (அலை) அவர்கள் காட்டிச் சென்ற ஸஹாபா பெருமக்கள் வாழ்ந்த அதே அடிச்சுவட்டில் நாம் பிள்ளைகளுக்கு ஆத்மீக பயிற்சி வழங்க வேண்டும். காலை, மாலை அல்குர்ஆனை அதிகமாக ஓதுவது, திக்ர், தஸ்பீஹ் ஸலவாத்தில் நிலைத்திருக்க செய்வது என்று நம் முன்னோர் வாழ்ந்த சீரிய வழி முறைகளை நாம் ஹயாத்தாக்கி இன்றைய சந்ததிகளை உருவாக்குவோமேயானால் தீய பழக்கவழக்கங்கள் மங்கிப்போய் நல்லதொரு சமுதாயம் ஒன்றை தோற்றுவிக்க முடியும்.
தலைமை உரையில் கலீபத்துஷ் ஷாதூலி மௌலவி இஸ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) கூறியதாவது, இம்மை, மறுமை ஈருலகிலும்
வெற்றி பெறுவது எமது வாழ்வின் நோக்கமாகும். இதற்கு தடையாக இருக்கும் ஒரு காரணியே ஆன்மீக வறுமையாகும். இதுவே எமது இம்மை வாழ்வின் வீழ்ச்சிக்கும் காரணமாகவுள்ளது. எனவே மங்கியும் படிப்படியாக விடை பெற்றுக் கொண்டு வரும் எமது ஆத்மீகத்துறை ஈடுபாட்டை நாம் புத்துயிரூட்டி வளர்த்தெடுப்பிலேயே எமது ஈருலக வெற்றியும் தங்கியிருக்கிறது. எங்கள் மத்தியில் சூபித்துவ ஆத்மீகத்துறை மேலோங்கி இருந்த காலகட்டத்தில் நாம் அரசியல், பொருளாதார, கல்வி உள்ளிட்ட உலகளாவிய துறைகள் அனைத்திலும் சிறந்தோங்கிய வரலாறு இருந்தது. என்ஜாய் பஞ்சநிலையில் இருக்கும் ஆத்மீகத்தை வளர்த்தெடுக்க கடமைப்பட்டுள்ளோம். எங்கள் ஊருக்கு 1865 ஆம் ஆண்டு ஆத்மீக வழி காட்டும் ஷாதுலியா தரீக்கா உதயமானது. மக்காவில் இருக்கும் ஷேக் முஹம்மது பாஸி நாயகத்தின் வழிகாட்டலில் ஷேஹ் ஸாலிஹ் மௌலானா எமது ஊருக்கு 1865 ஆம் ஆண்டு வருகை தந்தார். அவர் மூலம் இங்கு சூபித்துவம் வளர்ந்தது. அப்போது இங்கு வறுமையே தாண்டவமாடியது. 1947-இல் ஷேக் இப்ராஹிம் அல்பாஸி நாயகம் இலங்கை வந்தார். இந்த ஊரின் செல்வ செழிப்புக்காக பிரார்த்தனை புரிந்தார். காலை மாலை ஓதும் அவ்வராதுகளை சொல்லித் தந்தார். மூட செயல்களுக்கு விடை கொடுக்கச் செய்தார். சிங்கள நிலச் சுவந்தரால் நிர்வாகிக்கப்பட்ட தென்னந்தோப்புகள் சாராயம் தயார் செய்வதைக் கண்டு அந்த நிலத்தை வாங்கி சாராய உற்பத்தியை தடுக்க வழி வகுத்தார்.
சில வருடங்களில் மாணிக்கமகழ்வதே இல்லாத ஊரில் மாணிக்கம் குவிந்து, கள் உற்பத்தியான ஊரில் இரத்தினக் கல் வர்த்தகம் மேலும் இங்கு செல்வம் கொழிக்க ஆரம்பித்தது. ஆத்மீக ஈடுபாட்டாலே தான் இந்த உயர்வு ஏற்பட்டது. எனவே நாம் தொடர்ந்து சிறப்பாக வாழ ஆத்மீக பண்புகளை வளர்ப்போம்.
சிலுவை யுத்தத்தில் தோல்வி கண்ட கிறிஸ்தவர்கள் இனி முஸ்லிம்களை சிந்தனா ரீதியாக தோற்கடிக்கவே எங்கள் மத்தியில் சிந்தனை மாற்றங்களை தந்திரமாக புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு நாம் பழியாக கூடாது. எமது வரலாற்று சான்றாதாரங்களாக உள்ள ஸியாரங்களை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
ஜாமியதுல் பாஸிய்யா கலாபீட அதிபர் மௌலவி அஸ்மிகான் (முஅய்யிதி) உரையில், ஆத்மிக ஈடுபாட்டுக்கு வுழு அங்க சுத்தி மிகவும் இன்றியமையாத தாகும். நாம் வுழு செய்வதால் சம்பந்தப்பட்ட உறுப்புகளால் செய்த பாவங்கள் யாவும் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதனை ரசூல் (ஸல்) (அலை) அவர்கள் கூறிய ஹதீஸ் ஒன்று தெளிவுபடுத்துகிறது. இதேபோன்று குளிப்பதன் முக்கியத்துவம், தொழும் விதம் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட பணிப்பாளர் மெளலவி எம் ஜே எம் பஸ்லான் ( அஷ்ரபி -பீ ஏ) இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு என்ற தலைப்பில் இஸ்லாம் கூறும் இளைஞர்கள், வரலாற்றில் இடம்பிடித்த இளைஞர்கள் போன்ற விடயங்களை சான்றுகளோடு முன்வைத்தார்.
கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் மெளலவி எம் எம் ஸைனுல் ஆபிதீன், முர்ஸிய்யா ஸாவியா இமாம் மெளலவி நுஸ்கி (இல்மி), வாலிபர் ஹழரா ஜமாத் தலைவர் இமாம் ஹஸன், டாக்டர் அன்பாஸ் பாரூக் ஆகியவர்களின் உரையும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.
இறுதியாக பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது. இச்சான்றிதழ்களை சீனன் கோட்டை பள்ளிச் சங்க உப தலைவர் அல்ஹாஜ் சப்வான் நயீம், இணைச் செயலாளர்களான கலீபதுஷ் ஷாதுலி மெளலவி அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), ஜனாப் அரூஸ் அனஸ், உறுப்பினர் அல்ஹாஜ் முஸ்னி உவைஸ், மெளலவி நுஸ்கி (இல்மி), சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாத் சிரேஷ்ட உறுப்பினர்களான அல்ஹாஜ் பீ எம் முக்தார், ஜனாப் முஹம்மத் அரூஸீன், அல்ஹாஜ் மிஸ்ராஜ் மதீன், அல்ஹாஜ் ரிஸ்வி உவைஸ் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.





(பேருவளை நிருபர் – பீ எம் முக்தார்)