வாவியும் தரமட்டமாக்கப்பட்டு, திருகோணமலை மாவட்டம் முத்து நகர் வளமான விவசாய நிலம் அரச அனுசரனையுடன் தனியார் நிறுவனதுக்கு; எதிர்க்கட்சித் தலைவர் சகலதையும் சபையில் வெளிக்கொணர்வு
கம்பெனிகள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு விவாததத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் இச்சந்தர்ப்பத்தில் கம்பெனிகள் ஊடாக நடக்கும் இரு முறைகேடுகள் தொடர்பிலான விடயங்களை இங்கு முன்வைக்கிறேன். திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தகரவேட்டவொன், மத்தியவெளி, முத்து நகர் ஆகிய மூன்று கிராமங்களையும் சேர்ந்த 1000 குடும்பங்கள், 53 வருடங்களாக, 1972 ஆம் ஆண்டு முதல் 800 ஏக்கர் காணியில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். 2023 ஆண்டு முதல் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து 53 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Citizen voice வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (22) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வருகை தந்த திருகோணமலை முத்துநகர் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது காணிப் பிரச்சினையை முன்வைத்தனர். இதன் பிரகாரம், இப்பிரச்சினையை இன்றைய (23) தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விவசாய நிலங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் கோரியிருந்த போதிலும், அதனை வழங்காது விவசாயிகளை வெளியேற்றி, இந்த பயிர் செய்கை நிலத்தில் 200 ஏக்கர் காணியை பெற்றுக் கொடுத்து, அதில் சூரிய மின் சக்தி (புதுப்பிக்கத்தக்க மின் சக்தி) உற்பத்தி நிலையமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 53 வருடங்களாக பயிர் செய்து வந்த விவசாயிகள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். இந்த காணிக்கான உரிமை விவசாயிகளுக்கே காணப்படுகின்றது. சூரிய மின் சக்தியை ஊக்கவிக்க வேண்டும் தான், சூரிய மின்கல சேமிப்புகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையை அரசாங்கம் குறைத்துள்ள சந்தர்ப்பத்தில், இந்த சூரிய மின் சக்தி திட்டத்திற்கு இடத்தை ஒதுக்கி, விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மோசமான விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த விவசாயிகள் பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உர மானியங்கள், விவசாய கடன்கள் போன்றவற்றையும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தல் காலத்தில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவசாய நிலங்களைப் பாதுகாப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். தகரவேட்டவொன் குளம், கடலாஞ்சி குளம், சின்ன நானா குளம், முத்து நகர் குளம் என 4 குளங்கள் இப்பிரதேசங்களில் அமைந்து காணப்படுகின்றன. இந்த குளங்களை புனரமைப்பதற்கும் கூட அரச நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 53 வருடங்களாக பயிர்செய்கை மேற்கொண்ட, 1000 குடும்பங்களின், 800 ஏக்கர் காணியை ஒரு கையெழுத்தால் அபகரித்து, தற்போது வரையில் இரு சூரிய மின் சக்தி
(புதுப்பிக்கத்தக்க மின் சக்தி) நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கம்பெனிக்காரர்கள் விவசாயிகளை பொலிஸிக்கு அழைத்துச் சென்று பயமுறுத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அடுத்த போக விவசாய நடவடிக்கைகளை இந்த விவசாயிகளால் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள காணிகளுக்கான உரிமம் இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நீர்பாசன வடிகாளமைப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடமொன்றை பெற்று கொடுக்க வேண்டும். இந்த விளைநிலங்களை அபகரிக்கக் கூடாது. நிறுவனங்கள் தங்கள் நிதி பலத்தையும், ஏனைய பலங்களையும் பயன்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகள் முன்வைத்த விடயங்களின் பிரகாரம், 1972 முதல் இந்த காணிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 முதலே இந்த விவசாய காணிகளுக்கு பாதகம் விளைவிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் முன்வைத்த சந்தர்ப்பத்தில், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இந்தப் பிரச்சினையை முன்வைப்பதைத் தடுத்து அவருக்கு தடைகளை ஏற்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.