இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா; மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை
இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திங்கட்கிழமை இரவு திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவால் பதவி விலகுவதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் செவ்வாய்க்கிழமை அவையை நடத்தினார்.
இந்தியா நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜெகதீப் தன்கர். 2022 ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ெஜகதீப் தன்கர் பதவி ஏற்றார். அவையிலும், அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களுக்கும் மாநிலங்களவை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கும் பலமுறை கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜெகதீப் தன்கர் மாநிலளங்களவையை வழிநடத்தினார். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க நோட்டீஸ் தீர்மானம் தொடர்பான மனுக்களை அவரிடம் அனைத்துக்கட்சி எம்பிக்களும் வழங்கினர்.
இந்த சூழலில் திங்கட்கிழமை இரவு துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் கூறியதாவதூ,’ : உடல்நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(அ) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கும், இனிமையான அற்புதமான பணி உறவுக்கும் ஜனாதிபதியான உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பிரதமருக்கும், அமைச்சர்கள் குழுவிற்கும் எனது ஆழ்ந்த நன்றி. பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை. மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் பாசம் என்றென்றும் போற்றப்படும். மேலும் எனது நினைவில் பதிக்கப்படும். நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்’என்று தெரிவித்துள்ளார்.
தன்கரின் பதவிக்காலம் வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது.ஆனால் அவர் தனது பதவியை உடல் நலத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார். துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவையில் தலைவர் ஆவார். அந்த அடிப்படையில் திங்கட்கிழமை அவையை அவர் தான் வழிநடத்தினார். மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாள் கூட்டம் முடிந்ததும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை மாநிலங்களவையை வழிநடத்திய தன்கர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது. தன்கரின் இந்த திடீர் அறிவிப்பு டெல்லி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது. நீதித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட இருந்தார்.உடல் நிலையில் தன்கர் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், மத்திய அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், சிவராஜ் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்று இதில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜெகதீப் தன்கருக்கு பிரிவு உபசார உரை நிகழ்த்த வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் இன்றைய மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)