உள்நாடு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பிரதித் தவிசாளரால் அவசர ஆதரவு பிரேரணை; சபையால் நிறைவேற்றப்பட்டது

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு 2025 ஜூலை 21 இன்று சபை தவிசாளர் யூ.எஸ்.எம் உவைஸ் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் மற்றும் கௌரவ ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகியது. இந்த கண்ணி அமர்வில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான அவசர பிரேரணையை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் சமர்ப்பித்தார். தனது பிரேரணையில் ;

“1948 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத இஸ்ரேலிய அரசினால் பாலஸ்தீன மக்கள் தங்களது சொந்த நிலம், அடையாளம் மற்றும் சுயராஜ்யத்தை இழந்து, தொடர் துன்பங்களுக்குள்ளாகி வருகின்றனர். ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்பட்டு, பாலஸ்தீனத் தீவிர முறைகள், இடம்பெயர்வுகள் மற்றும் கட்டாயக் குடியேற்றங்களின் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் ஒழுக்கமின்றி மீறப்பட்டு வருகின்றன.”

“அண்மைக்காலமாக, பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸா மற்றும் வெஸ்ட் பாங்க் பகுதிகளில் இடம்பெறும் வன்முறை நடவடிக்கைகள் பல இலட்சம் மக்கள், சிறுவர்களின் உயிரைப் பறித்துள்ளன. அப்பாவி மக்கள், சிறுவர்கள் பள்ளிகளில், மருத்துவமனைகளில், மற்றும் குடியிருப்புகளில் கூட பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அனைத்தும் ஐ.நா. மனித உரிமைச் சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானவை.”

பொது மக்கள்,சிறுவர்கள் எந்தவொரு போரிலும் இலக்காகக் கருதப்படக் கூடாது. அவர்களின் பாதுகாப்பு என்பது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும். சட்ட விரோத இஸ்ரேல் அரசின் தாக்குதல்களால் பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களின் நிலைமைகள் குறித்து இப்பிரதேச சபை ஆழ்ந்த கவலையுடன் தனது கருத்தை வெளியிடுகிறது. “எனவே, இப்பிரேரணை மூலம் இப்பிரதேச சபைக்கு நான்கு முன்மொழிவுகளை பாலஸ்தீன மக்களுக்கும் சிறுவர்களுக்கும் எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக் சமர்ப்பிக்கிறோம்.

  1. பாலஸ்தீன மக்களுக்கும் சிறுவர்களுக்கும் எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு, பாலஸ்தீன் நாட்டை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும், இவர்களின் மனித உரிமைகள், நில உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ள நிலைமைக்கு நியாயமும் தீர்வும் தேவை. மனிதாபிமானமும் நீதியும் நிலைநிறுத்தப்படும் வரை, நாங்கள் ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன மக்களின் பக்கமாக இருக்கிறோம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
  2. பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை வலியுறுத்தி சர்வதேச சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
  3. சட்டவிரோத இஸ்ரேலிய அரசினால் ஈரானை நோக்கி மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமல்லாது உலக அமைதிக்கும் பெரும் சவாலாக உள்ளன. இந்தக் கடுமையான நடவடிக்கைகள், பிராந்திய போர்க்கலத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதுடன், அமைதிப் பேசுவார்த்தைகளை பாதிக்கின்றன. இவ்வாறான உரிமை மீறல்களை வலியுறுத்தி சர்வதேச சமுதாயம் எதிர்காலத்தில்
    நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
  4. இலங்கை அரசுக்கும் இந்த நிலையை மனிதாபிமான அடிப்படையில் மதித்து சரியான முடிவுகள் எடுக்க அரசியல் நெறிப்பாதை வகுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

“இந்த பிரேரணை, மனித உரிமையும், சமாதானமும் சார்ந்த நமது சபையின் உறுதியான குரலாகும்.” என்று முன்மொழிந்தார்.

இந்த பிரேரணை ஏகமனதாக சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுப்பினர் எஸ்.ஐ.எம். றியாஸ் பிரேரித்து உறுப்பினர் ஏ. பாயிஸ் அவர்களால் ஆமோதித்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் சட்டவிரோத சாபத் இல்லங்களை அகற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் சபை வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *