பங்களாதேஷில் பாடசாலை மீது விழுந்த விமானம்.; 25 சிறுவர்கள் உட்பட 27 பேர் பலி
பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் விழுந்த பாடசாலை கட்டிடத்தில் இருந்து மீட்டகப்பட்ட 27 பேரின் சடலங்களில் குறைந்தது 25 பேர் சிறுவர்கள் என அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், 88 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா – குர்மிடோலாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிப் பணிக்காக திங்கள்கிழமை பிற்பகல் 1:06 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே F-7 BGI விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டமையே விபத்திற்கு காரணம் என இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த விமானம் அந்தப் பகுதியில் உள்ள பாடசாலை மீது மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்து தொடர்பில் தலைமை சுகாதார ஆலோசகரின் சிறப்பு உதவியாளர் சயதுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 88 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் 25 குழந்தைகள், ஒரு ஆசிரியர் மற்றும் விமானி ஆகியோர் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விபத்தை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் ஒரு நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.
ஜேன்ஸ் இன்ஃபர்மேஷன் குரூப்பின் கூற்றுப்படி, F-7 BGI என்பது சீனாவின் செங்டு விமானக் குடும்பத்தில் இறுதி மற்றும் மிகவும் மேம்பட்ட வகை விமானமாகும்.
இதன்படி, பங்களாதேஷ் 2011ஆம் ஆண்டு 16 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், விநியோகங்கள் 2013ஆம் ஆண்டு நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் ஏர் இந்தியா விமானம் மோதியதில், விமானத்தில் இருந்த 241 பேர் உள்ளடங்களாக 260 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்து ஏற்பட்ட ஒரு மாத கால இடைவெளியில் தற்போது பங்களாதேஷ் விமான விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.