பொலன்னறுவை ஆஸ்பத்திரிக்கு சுகாதார அமைச்சர் கள விஜயம்..!
வடமத்திய மாகாணத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான பொலன்னறுவை வைத்தியசாலைக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் ஒரு முறையான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து அந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு தரமான மற்றும் விணைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இங்கு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் பல பிரிவுகள் வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் எதிர் காலச் செயற்பாடுகள் என்பனவும் கண்காணிக்கப்பட்டதுடன் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் குறித்தும் கண்டறியப்பட்டது.
கண்காணிப்பின் பின்னர் வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் வைத்தியசாலை முகாமைத்துவ அதிகார சபை மற்றும் ஊழியர்களுடன் ஒரு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் இதன் போது இரத்தம் மாற்றூட்டல் சிகிச்சைக்கு தேவையான சில இயந்திரங்களை வைத்தியசாலைக்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நன்கொடையாக வழங்கியதுடன் அந்த இயந்திரங்களை பெறும் நிகழ்விலும் அமைச்சர் கலந்து கொண்டார்.
இதன் போது வைத்தியர் ஜகத் விக்ரம ரத்ன , வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் டி.பி.சரத் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான என்.ஆர்.பி. பண்டார பி.எச்.எஸ்.ரத்னசிறி பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் உபுல் கருனாரத்ன சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)





