பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம் எதிர்க்கத்தக்கது..! – சஜித் பிரேமதாச
பாடசாலை கட்டமைப்பையே அழிக்கும் கல்விச் சீர்திருத்தங்களையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த நாசகார கொள்கைகளுக்கு எதிராக நாம் முன்நிற்போம். இதற்காக நாம் அஞ்சப்போவதில்லை. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்கும் மக்களுக்காக நாம் முன்நிற்போம். மக்களுக்காக எம்மால் இயன்றவரைப் போராடி எமது உச்சக்கட்ட கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அநுராதபுரம் தம்புத்தேகம நகரில் சனிக்கிழமை (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்;
தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் விவசாயிகளைப் பாதுகாப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் இன்று நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து பொம்மை அரசாங்கமாகவே இருந்து வருகின்றது. மக்களின் வாழ்க்கையை அழித்து அவர்களை படுகுழியின் பால் இழுத்துச் செல்லும் இந்த மக்கள் விரோத செயல்களை நாம் எதிர்ப்போம். மக்களுக்காக என்னால் இயன்றவரைப் போராடி எனது உச்சக்கட்ட கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன்.
நாட்டில் எங்குமே பிரச்சினைகள் காணப்படுகின்றன. 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவித்து விட்டுஇ இப்போது நாட்டிற்கு பொய்யையும் பொய்யான பன பிரசங்கத்தையும் சொல்லி வருகின்றனர்.பாடசாலை கட்டமைப்பையே அழிக்கும் கல்விச் சீர்திருத்தங்களைக்கூட இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாசகார கொள்கைகளுக்கு எதிராக நாம் முன்நிற்போம். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்கும் மக்களுக்காக நாம் முன்நிற்போம் என்றார்.